ஊரடங்கு நீக்கம்; 53 பேர் கைது; அரபு வசந்தம் கோரி போராடியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிப்பு

கொழும்பு வடக்கு, தெற்கு, மத்திய, நுகேகொடை, களனி, கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவுகளுக்கு பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு இன்று அதிகாலை 5.00 மணிக்கு நீக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ தெரிவித்தார்.

மிரிஹான, பெங்கிரிவத்தை பிரதேசத்திலுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வெற்றிக்கு அருகில் நேற்றிரவு பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில் அவரின் மீது கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதல்கள் இடம்பெற்றன.

இதனைத் தொடர்ந்து ஆத்திரமுற்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் அமைதியின்றி செயற்பட்டனர்.

இதன்போது இராணுவ பஸ் ஒன்று எரிக்கப்பட்டுள்ளதோடு, பொலிஸ் பஸ்கள் 3 இற்கு சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதில் ஒன்று எரிக்கப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் முச்சக்கரவண்டி 01, மோட்டார் சைக்கிள்கள் 02 ஆகியன முழுமையாக தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாகவும், மிரிஹான தலைமையக பொலிஸ் பரிசோதகரின் கடமைக்கு வழங்கப்பட்டுள்ள Scorpio வகை ஜீப் ஒன்றிற்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் விசேட அதிரடிப்படையின் பஸ்கள் 02 மற்றும் பொலிஸ் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்ட வாகனம் உள்ளிட்ட வாகனங்களுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவத்தில் இதுவரை பெண் ஒருவர் உள்ளிட்ட 53 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நுகேகொடை, ஜுபிலி சந்தியில் நேற்று (31) இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் பின்னணியில் கடும்போக்குவாதிகள் குழுவொன்று இருப்பதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன், அதில் பலர் கைது செய்யப்பட்டதாகவும் அவர்களில் பெரும்பாலானோர் திட்டமிட்டு கடும்போக்குவாதிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் அரபு வசந்தத்தை இந்நாட்டில் ஏற்படுத்துவோம் என கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தாகவும் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

PDF File: 

Add new comment

Or log in with...