முற்றாக எரிந்த வீடு; தந்தை, மகள் உள்ளிட்ட மூவர் பலி

முற்றாக எரிந்த வீடு; தந்தை, மகள் உள்ளிட்ட மூவர் பலி-Fire-House Burnt-3 Killed Including Father & Daughter

- தீ விபத்துக்கான காரணம் தொடர்பில் விசாரணை (UPDATE)

இன்று (24) அதிகாலை கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மெனிக்கும்புர பிரதேசத்திலுள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீயில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த வீட்டில் இருந்த தந்தை, மகள் மற்றும் குறித்த வீட்டுக்கு வந்திருந்த மகளின் காதலன் என தெரிவிக்கப்படும் இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், நிஹால் தல்தூவ தெரிவித்தார்.

முற்றாக எரிந்த வீடு; தந்தை, மகள் உள்ளிட்ட மூவர் பலி-Fire-House Burnt-3 Killed Including Father & Daughter

சம்பவத்தில் படுகாயமடைந்த 60 வயதான தாய் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நிஹால் தல்தூவ மேலும் தெரிவித்தார்.

இச்சம்பவம் இன்று (24) அதிகாலை 6.40 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு உயிரிழந்த தந்தையான ஈஸ்வரதேவன், கட்டுகஸ்தோட்டை ரணவன வீதியில் வெற்றிலை விற்பனை செய்து வரும் நபராவார். இவரது 31 வயதுடைய மகள் ஈஸ்வரதேவன் மேனகா மற்றும் அவரது காதலன் என தெரிவிக்கப்படும் நபர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

முற்றாக எரிந்த வீடு; தந்தை, மகள் உள்ளிட்ட மூவர் பலி-Fire-House Burnt-3 Killed Including Father & Daughter

தகட்டு கூரையால் வேயப்பட்ட ஒரு சிறிய வீட்டில் இவர்கள் வசித்து வந்துள்ளனர். தீ ஏற்பட்டதை அவதானித்த பிரதேசவாசிகள் குறித்த வீட்டின் கதவொன்றைத் திறந்து அங்கிருந்த ராணி அம்மா என அழைக்கப்படும் பெண்ணை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

தீக்காயங்களுடன் உயிரிழந்த யுவதியின் காதலன் வீட்டுக்கு வந்து தீ மூட்டப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் கண்டியில் உள்ள நகைக்கடை ஒன்றில் பணிபுரிபவர் எனவும், திருடிய குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு சுமார் ஆறு மாதங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்ததாகவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

சந்தேகநபர் குறித்த யுவதியுடன் சுமார் 10 வருடங்களாக தொடர்பிலிருந்ததாகவும், அதனை யுவதி இடைநிறுத்தியதால் ஆத்திரமடைந்து தீவைத்துள்ளதாக சந்தேகிக்கப்படுவதாக, கண்டி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமில் ரத்நாயக்க தெரிவித்தார்.

தடயவியல் அறிக்கைகள் கிடைத்த பின்னரே தீக்கு பயன்படுத்தப்பட்ட திரவம் தொடர்பில் அறிய முடியும் என்றும் அவர் கூறினார்.

இதேவேளை, வீட்டில் இருந்த சிறிய இரும்புப் பெட்டகத்தில் 50 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பணம் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

காலை 7.00 மணியளவில் ஈஸ்வரனின் வீட்டில் இருந்து அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்தபோது வீடு தீப்பிடித்து எரிவதை பார்த்து, மூடிய கதவை திறந்தவுடன் ராணி அம்மா தரையில் வந்து வீழ்ந்தார் என, சம்பவத்தை நேரில் பார்த்த 45 வயதான றிஸ்வான் ஜமால்தீன் தெரிவித்தார்.

தீ வேகமாக பரவி வருவதால் யாரும் வீட்டிற்குள் செல்ல முடியவில்லை எனவும், தீயை அணைத்த பின்னர் மூவரும் வீட்டினுள் சடலமாக காணப்பட்டதாகவும் அவர் கூறினார்.

தெரிவிக்கப்படும் தகவலின் அடிப்படையில் கட்டுகஸ்தோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ரசிக சம்பத்தின் அறிவுறுத்தலின் பேரில், பிரதான பொலிஸ் பரிசோதகர் குலசேன தலைமையிலான குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Add new comment

Or log in with...