பொரளை கைக்குண்டு மீட்பு சம்பவம்; வைத்தியருக்கு மேல் நீதிமன்றம் பிணை

பொரளை அனைத்துப் புனிதர்கள் தேவாலயத்தில் கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஓய்வுபெற்ற வைத்தியர் ஷேர்லி ஹேரத் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இன்றையதினம் (21) குறித்த வைத்தியரின் பிணை மனுவை  விசாரித்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் மஞ்சுள திலகரத்ன அவருக்கு பிணை வழங்குமாறு உத்தரவிட்டார்.

பொரளை அனைத்து புனிதர்கள் தேவாலயத்தில் கடந்த ஜனவரி மாதம் 11ஆம் திகதி கைக்குண்டொன்று மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில், அவ்வாலயத்தின் ஊழியர்கள் உள்ளிட்ட ஐவர் கைது செய்யப்பட்டிருந்ததோடு, அவர்களில் சிலர் விடுவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இவர்களில் அரச வைத்திய சேவையிலிருந்து ஓய்வு பெற்று, பிலியந்தலையில் தனியார் மருந்தகமொன்றை நடாத்தி வந்த  வைத்தியர் ஒருவர் இச்சம்பவத்துடன் தொர்புடைய பிரதான சந்தேகநபர் என தெரிவிக்கப்பட்டு, பிலியந்தலை பிரதேசத்தில் வைத்து, கொழும்பு குற்றவியல் பிரிவினால் (CCD) கடந்த ஜனவரி 18ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த சம்பவம் தொடர்பில் கைதான ஓய்வுபெற்ற வைத்தியர் ஷேர்லி ஹேரத் உள்ளிட்ட சந்தேகநபர்கள் மூவருக்கும் மார்ச் 29 ஆம் திகதி வரையில் விளக்கமறியலை நீடிப்பதற்கான உத்தரவை கொழும்பு பிரதான நீதவான் கடந்த மார்ச் 14ஆம் திகதி உத்தரவிட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 


Add new comment

Or log in with...