பாடசாலைக் கூட்டத்தில் குளவித் தாக்குதல்; 60 மாணவர்கள் வைத்தியசாலையில்

பாடசாலைக் கூட்டத்தில் குளவித் தாக்குதல்; 60 மாணவர்கள் வைத்தியசாலையில்-Wasp Attack-60 Students Hospitalized

மொணராகலை மாவட்டத்தின் எதிமலை இசுறு மகா வித்தியாலய மாணவர்கள் 60 பேர் இன்று (14) காலை குளவிக் கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை 8.00 மணியளவில் திறந்த வெளியில் நடைபெற்ற காலைக் கூட்டத்தில் பங்குபற்றிய மாணவர்களே இவ்வாறு குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

குறித்த கூட்டம் நடைபெற்ற இடத்திற்கு அருகில் உள்ள கட்டடத்தில் இருந்த குளவிக் கூடின் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்த நிலையில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ தெரிவித்தார்.

தாக்குதலுக்கு உள்ளான சுமார் 60 மாணவர்கள், பாடசாலையின் அதிபர் மற்றும் ஆசிரியர்கள் இருவர் தற்போது எதிமலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில், இரண்டு சிறுவர்கள் மேலதிக சிகிச்சைக்காக சியம்பலாண்டுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இச்சம்பவத்தைத் தொடர்ந்து பாடசாலையின் ஏனைய மாணவர்கள் பத்திரமாக வீடுகளுக்கு அனுப்பப்பட்டதுடன் பாடசாலையை தற்காலிகமாக மூடுவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதேவேளை, இன்று இரவு பிரதேசவாசிகளுக்கும், வனவிலங்கு அதிகாரிகளுக்கும் அறிவித்து குறித்த குளவிக் கூட்டை அங்கிருந்து பாதுகாப்பாக அகற்றுவதற்கான நடவடிக்கையை எடுக்க பொலிஸார் தயாராகி வருகின்றனர்.  


Add new comment

Or log in with...