வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்புவோருக்கு டொலருக்கு மேலதிக கொடுப்பனவாக ரூ. 38

வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்புவோருக்கு டொலருக்கு மேலதிக கொடுப்பனவாக ரூ. 38-14 Cabinet Decisions-Mar-07

- காணாமல் போனோர்: 14,988 முறைப்பாடுகளை விசாரிக்க 25 விசாரணைக் குழுக்கள்
- ஜனாதிபதி தலைமையில் 11 பேர் கொண்ட பொருளாதார பேரவை வாராந்தம் கூடும்

- இவ்வார அமைச்சரவைக் கூட்டத்தில் 14 தீர்மானங்கள்

புலம்பெயர் தொழிலாளர்கள் எமது நாட்டுக்கு அனுப்புகின்ற ஒரு அமெரிக்க டொலருக்காக தற்போது செலுத்தப்பட்டு வரும் 10 ரூபா ஊக்குவிப்புக் தொகையை 38 ரூபா வரை அதிகரிப்பதற்காக தொழில்  அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நேற்று (07) இடம்பெற்ற அமைச்சரவையில் இடம்பெற்ற கூட்டத்திலேயே இவ்வாறு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த கூட்டத்தில் 14 முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1. பொருளாதார பேரவையை நிறுவுதல்
பெருநிலைப் பொருளாதாரக் கொள்கை, கொவிட் - 19 பெருந்தொற்று நிலைமையின் பின்னர் தேசிய பொருளாதாரத்தின் செயற்பாடு, பொருளாதார மீள்கட்டமைத்தல், அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கை மற்றும் நிதிக் கொள்கைகளில் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தும் முக்கிய அபிவிருத்திக் கருத்திட்டங்கள் உள்ளிட்ட உள்ளூர் பொருளாதாரக் கொள்கைகள் தொடர்பாக மிகவும் ஆழமாகக் கலந்துரையாடி ஒட்டுமொத்த பொருளாதார முகாமைத்துவத்தை மேற்கொள்வதன் மூலம் எமது நாட்டின் பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்தும் நோக்கில் “பொருளாதார பேரவை” வாராந்தம் கூடுவதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.

குறித்த பேரவையின் ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்களுக்கமைய ஏற்புடைய அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் நியதிச்சட்ட நிறுவனங்கள் தேவையான சந்தர்ப்பங்களில் அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் இயைபுடைய தீர்மானங்களை நடைமுறைப்படுத்தவும், தேவைக்கேற்ப பொருளாதாரப் பேரவைக் கூட்டத்திற்கு போதுமான துறைசார் அறிவுகொண்ட கல்வியியலாளர்களை அழைக்கவும், ஜனாதிபதியினால் மேற்கொள்வதற்கு எதிர்பார்க்கப்படும் படிமுறைகள் தொடர்பாக அமைச்சரவையின் உடன்பாட்டை வழங்குவதற்குத் தீர்மானித்துள்ளது.

அதற்கமைய, பொருளாதார பேரவையின் கட்டமைப்பு கீழ்வருமாறு அமையும்.

 • ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (தலைவர்)
 • பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ
 • வர்த்தக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்த்தன
 • நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெனாண்டோ
 • நிதி அமைச்சர் கலாநிதி பசில் ராஜபக்ஷ
 • விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுக்கமகே
 • பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரண
 • இலங்கை மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால்
 • ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத்
 • திறைசேரி செயலாளர் எஸ். ஆர். ஆட்டிகல
 • இலங்கை மத்திய வங்கியின் பிரதி ஆளுநர் தம்மிக்க நாணயக்கார

2. வெளிநாட்டிலுள்ள வெளிநாட்டு பணவரவுகளை அதிகரிப்பதற்காக ஊக்குவிப்பைகளை வழங்கல்
இலங்கைக்கு அந்நிய செலாவணி கிடைக்கின்ற முக்கிய துறையாக வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் மூலம் வருடாந்தம் 7-8 பில்லியன் அமெரிக்க டொலர்கள் எமது நாட்டுக்குப் பணவரவாகக் கிடைக்கின்றது.

அவ்வாறு புலம்பெயர் தொழிலாளர்கள் வெளிநாடுகளில் சம்பாதிக்கும் அந்நிய செலாவணியை எதிர்வரும் புதுவருட காலத்தில் எமது நாட்டுக்குப் பணம் அனுப்புதலை ஊக்குவித்தல், புலம்பெயர் தொழிலாளர்களை பாராட்டுதல் மற்றும் அவர்களின் குடும்ப அங்கத்தவர்கள் மற்றும் தங்கி வாழ்பவர்களுக்கு அதிக பொருளாதார நன்மைகளைப் பெற்றுக்கொடுப்பதற்காக புலம்பெயர் தொழிலாளர்கள் எமது நாட்டுக்கு அனுப்புகின்ற ஒரு அமெரிக்க டொலருக்காக தற்போது செலுத்தப்பட்டு வரும் 10 ரூபா ஊக்குவிப்புக் தொகையை 38 ரூபா வரை அதிகரிப்பதற்காக தொழில்  அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

3. காணாமல் போன ஆட்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள முறைப்பாடுகளை விசாரணை நடாத்துதல்
2016 ஆம் ஆண்டு 14 ஆம் இலக்க சட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் நிறுவப்பட்டுள்ளது.

குறித்த அலுவலகத்தால் மாத்தறை, மன்னார், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மற்றும் கிளிநொச்சி போன்ற பிரதேசங்களில் பிராந்திய அலுவலகள் நிறுவப்பட்டுள்ளதுடன், அப்பிராந்திய அலுவலகங்களுக்கு காணாமல் போனமை தொடர்பான 14,988 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய முறையான விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் காணாமல் போன ஆட்களின் உறவினர்களுக்கு அறிக்கைகளை வழங்கல் உள்ளிட்ட அதிக பணிகளை காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, குறித்த முறைப்பாடுகளை விசாரணை செய்து முடிவுறுத்துவதற்காக 25 விசாரணைக் குழுக்களை நியமித்து துரித வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக நீதி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

4. இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான முத்துராஜவெல கைத்தொழில் வலயத்தில் அமைந்துள்ள காணியின் ஒருபகுதியை குத்தகை அடிப்படையில் வழங்கல்
இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான முத்துராஜவெலயில் அமைந்துள்ள 400 ஏக்கர் காணியானது, கடல்மண் நிரப்பப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது.

குறித்த காணியில் பல காணித்துண்டுகள் தேசிய ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த பல கருத்திட்டங்களுக்காக அரச மற்றும் தனியார் முதலீட்டாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. குளிரூட்டல் களஞ்சிய வசதிகளுக்காக குறித்த காணியில் ஒரு துண்டை பெற்றுத்தருமாறு இமேர்ஜன்ட் கோல்ட் (தனியார்) நிறுவனம் கோரியுள்ளதுடன், குறித்த நிறுவனம் அக்காணித்துண்டைப் பெற்றுக்கொள்வதற்காக இலங்கை முதலீட்டுச்சபைச் சட்டத்தின் 17 ஆவது உறுப்புரையின் கீழ் அடிப்படைத் தகைமைகளைக் கொண்டுள்ளமையை, இலங்கை முதலீட்டு சபை அறிவித்துள்ளது.

அதற்கமைய, முன்மொழியப்பட்டுள்ள கருத்திட்டத்திற்குப் பொருத்தமென அடையாளங் காணப்பட்டுள்ள 04 ஏக்கர் 02 றூட் காணித்துண்டை 30 வருட காலத்திற்கு நீண்டகால ஒப்பந்தத்தின் அடிப்படையில் அக்கம்பனிக்கு வழங்குவதற்காக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சராக கௌரவ பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

5. குற்றவியல் விடயங்களுக்கான பரஸ்பர சட்ட ரீதியான ஒத்துழைப்புக்கான பிம்ஸ்டெக் உடன்படிக்கை (BIMSTEC Convention)
குற்றவியல் விடயங்களுக்கான பரஸ்பர சட்டரீதியான ஒத்துழைப்புக்கான பிம்ஸ்டெக் உடன்படிக்கையில் (BIMSTEC Convention) கையொப்பமிடுவதற்காக இதற்கு முன்னர் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதற்கமைய, 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30 ஆம் திகதி இடம்பெறவுள்ள பல்துறைசார் தொழிநுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்களுக்கான வங்காள விரிகுடா நாடுகள் சார்ந்த தொடக்க முயற்சிகள் (BIMSTEC) மாநாட்டில் நீதி அமைச்சால் ஒவ்வொரு பிம்ஸ்டெக் (BIMSTEC) உறுப்பு நாடுகளுடன் குறித்த உடன்படிக்கையில் கையொப்பமிடுவதற்காக தனது அமைச்சின் மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக வெளிவிவகார அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களை அமைச்சரவை கருத்தில் கொண்டுள்ளது.

6. பல்துறைசார் தொழிநுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்களுக்கான வங்காள விரிகுடா நாடுகள் சார்ந்த தொடக்க முயற்சிகள் (BIMSTEC) அமைப்பின் தொழிநுட்ப பரிமாற்ற வசதிகளை நிறுவுதல் தொடர்பான பிம்ஸ்டெக் ஒத்துழைப்பு உடன்படிக்கை
தொழிநுட்ப பரிமாற்ற வசதிகளை நிறுவுதல் தொடர்பான பிம்ஸ்டெக் ஒத்துழைப்பு உடன்படிக்கையில் கையொப்பமிடுவதற்காக இதற்கு முன்னர் இடம்பெற்ற அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதற்கமைய, 2022 மார்ச் மாதம் 30 ஆம் திகதி இடம்பெறவுள்ள பல்துறைசார் தொழிநுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்களுக்கான வங்காள விரிகுடா நாடுகள் சார்ந்த தொடக்க முயற்சிகள் (BIMSTEC) மாநாட்டில் திறன் அபிவிருத்தி, தொழிற்கல்வி, ஆய்வுகள் மற்றும் புதிய உற்பத்திகளுக்கான இராஜாங்க அமைச்சால் ஒவ்வொரு பிம்ஸ்டெக் உறுப்பு நாடுகளுடன் குறித்த உடன்படிக்கையில் கையொப்பமிடுவதற்காக தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றமையை வெளிவிவகார அமைச்சர் சமர்ப்பித்த விடயங்களை அமைச்சரவை கருத்தில் கொண்டுள்ளது.

7. ராகமை குருதியியல் மற்றும் புனர்வாழ்வு மருத்துவமனைக்கு சக்கர நாற்காலிகள் மற்றும் ஏனைய நடமாடும் உபகரண உதவிகள்
எமது நாட்டில் வருடாந்தம் கிட்டத்தட்ட 1500 பேர் வரை முதுகெலும்புசார் காயங்களால் உடல் உபாதைகளுக்கு ஆளாகின்றமை பதிவாகின்றது. புனர்வாழ்வு சிகிச்சை சேவைகள் தேவைப்படும் குறித்த நோயாளர்களுக்கு அச்சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்கான தேசிய நிலையமாக றாகம குருதியியல் மற்றும் புனர்வாழ்வு மருத்துவமனை காணப்படுகின்றது.

குறித்த மருத்துவமனையில் நோயளர்களுக்கு வருடாந்தம் 200 சக்கர நாற்காலிகள், 350 நடமாடும் ஊன்றுகோல்கள் மற்றும் 100 உடலணை அங்கிகள் தேவைப்படுகின்றன.

குறித்த மருத்துவனையின் ஊழியர்களைப் பயிற்றுவித்தல் மற்றும் 564 சக்கர நாற்காலிகள், 370 நடமாடும் ஊன்றுகோல்கள் மற்றும் 410 உடலணை அங்கிகளை வழங்குவதற்காக 43.70 மில்லியன் ரூபா மானியம் வழங்குவதற்கு உலக மனிதாபிமான உதவிகள் நிறுவனமான ஐக்கிய அமெரிக்காவின் Latter - Day Saint Charities (LDSC) நிறுவனம் உடன்பாடு தெரிவித்துள்ளது. அதற்கமைய, குறித்த உதவிகளைப் பெற்றுக்கொள்வதற்காக அந்நிறுவனத்துடன் உடன்பாட்டு ஒப்பந்தமொன்றில் கையொப்பமிடுவதற்காக சுகாதார அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

8. தெரணியகல பொலிஸ் பிரிவில் நூரியவில் புதிய பொலிஸ் நிலையமொன்றை அமைப்பதற்கான காணியைப் பெறல்
கேகாலை மாவட்டத்தில், தெரணியகல பிரதேச செயலகப் பிரிவில், இலக்கம் 110, தொடாவத்த கிராம அலுவலர் பிரிவில், நூரிய பொலிஸ் நிலையத்தை அமைப்பதற்காக அடையாளங் காணப்பட்டுள்ளது.

அங்கு புதிய பொலிஸ் நிலையத்தை அமைப்பதன் மூலம் அப்பிரதேசத்தின் பொதுமக்களுக்கு வினைத்திறன்மிக்க பொலிஸ் சேவையை வழங்குவதற்கும், பிரதேசத்தில் இடம்பெறும் குற்றங்கள் மற்றும் மோசடிச் செயற்பாடுகளை தடுப்பதன் மூலம் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக விவசாய அமைச்சின் கீழ் காணப்படும் ஜனதா தோட்ட அபிவிருத்தி சபைக்குச் சொந்தமான நூரியவத்த காணியில் 02 ஏக்கர்களை பெற்றுக்கொள்வதற்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

9. அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் எஸ்.பி.எம்.சீ – லோட்டஸ் ஃபாமா கருத்திட்டத்திற்கான சுயாதீன ஆலோசகர் ஒருவரை சேவையில் அமர்த்துதல்
அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் எஸ்.பி.எம்.சீ – லோட்டஸ் ஃபாமா கருத்திட்டம் ஹொரணை, மில்லாவ பகுதியில் நிறுவுவதற்காக 2021 மார்ச் மாதம் 08 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானத்தின் மூலம் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ஆலோசகர் ஒருவர்/ஆலோசனை நிறுவனமொன்றை தெரிவு செய்வதற்காக சர்வதேச போட்டி விலைமுறி பொறிமுறையை பின்பற்றுவதற்கு 2021 ஒக்டோபர் மாதம் 25ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

அதற்கமைய, சர்வதேச போட்டித்தன்மையின் அடிப்படையில் விலைமுறி கோரப்பட்டுள்ளதுடன், விபரக் குறிப்புக்கள் அடங்கிய பதிலளிப்புடன் கூடிய மதிப்பீட்டின் அடிப்படையில் குறைந்த விலைமுறியாக அமைந்த இந்தியாவின் மெரீடியன் இன்ஜினியர்ஸ் அன்ட் கன்சல்டன்சி சேர்விசஸ் நிறுவனத்திற்கு குறித்த பெறுகையை வழங்குவதற்கு அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தர பெறுகைக் குழு பரிந்துரைத்துள்ளது.

அதற்கமைய, குறித்த நிறுவனத்திற்கு முன்மொழியப்பட்ட கருத்திட்டத்தின் ஆலோசகரான நியமிப்பதற்காக சுகாதார அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

10. அஞ்சல் அலுவலக பிணை நிதியக் கட்டளைச்சட்டம்
1931 இலக்கம் 01 உடைய அஞ்சல் அலுவலக பிணை நிதியக் கட்டளைச்சட்டத்தின் கீழ் அஞ்சல் அலுவலக பிணை நிதியம் தாபிக்கப்பட்டுள்ளது.

அஞ்சல் திணைக்களத்தின் அனைத்து அங்கத்தவர்களுக்கும் குறித்த நிதியத்தின் மூலம் மிகவும் பயனுள்ள சேவைகளை வழங்குவதற்கு இயலுமான வகையில் அஞ்சல் அலுவலக பிணை நிதியக் கட்டளைச்சட்டத்தை திருத்தியமைப்பதற்காக இதற்கு முன்னர் அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்திருப்பினும், அதற்குரிய சட்டமூலம் தயாரிக்கும் நடவடிக்கைகள் இதுவரை பூர்த்தியடையவில்லை.

அதனால், சமகாலத்திற்குப் பொருத்தமான வகையில் இயைபுடைய ஏற்பாடுகளை உட்சேர்த்து குறித்த சட்டமூலத்தை சட்ட வரைஞர் மூலம் தயாரிப்பதற்காக வெகுசன ஊடக சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

11. குடியியல் சட்டக்கோவைக்கான திருத்தம் (101 ஆம் அத்தியாயம்) – (XLII ஆம் அத்தியாயத்தை முடிவுறுத்தல்)
அமைச்சரவை அங்கீகாரத்துடன் சட்ட விரிவாக்கல் மறுசீரமைப்புக்காக தாபிக்கப்பட்டுள்ள அலகின் ஒரு உபகுழுவாக திருமண விவகாரங்கள் தொடர்பான சட்டமூங்களைத் தயாரிக்கும் உபகுழு உருவாக்கப்பட்டுள்ளது.

அதன் மூலம், விவாகரத்து, திருமண அறுநிலை மற்றும் திருமண முடிவுறுத்தல் போன்ற காரணங்கள், திருமண விவகார வழக்குகளில் நடபடிமுறைகள் மற்றும் பிள்ளைகளின் பொறுப்பு வழங்கும் போது கவனிக்க வேண்டிய விடயங்கள் தொடர்பாக அடிப்படை ஏற்பாடுகள் அடங்கிய சட்டமூலமொன்று தயாரிக்கப்பட்டுள்ளது.

திருமண விவகார வழக்குகள் தொடர்பான நடபடிமுறைகள் குடியியல் வழக்குக் கோவை XLII ஆம் அத்தியாயத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், முன்மொழியப்பட்டுள்ள திருமண விவகாரங்கள் தொடர்பான சட்டம் அமுலில் இருப்பதால் குறித்த அத்தியாயம் தேவையற்றதாகும்.

அதற்கமைய, குடியியல் வழக்குக் கோவையின் XLII ஆம் அத்தியாயத்தை முடிவுறுத்துவதற்கும், அதற்கான சட்டமூலத்தைத் தயாரிக்குமாறு சட்ட வரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்கும் நீதி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

12. வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டுள்ள ஒழுங்குவிதிகளை பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பித்தல்
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் சந்தை விலையை நிலையாகப் பேணுவதன் மூலம் நுகர்வோருக்கு சலுகைகளை வழங்குவதற்காக உள்ளூர் விவசாயிகளைப் பாதுகாக்கும் நோக்கில் அரசாங்கத்தின் கொள்கைத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்காக 2007 ஆம் ஆண்டு 48 ஆம் இலக்க விசேட வர்த்தகப் பண்டங்கள் தொடர்பான 04 கட்டளைகள் வெளியிடப்பட்டுள்ளன.

அதேபோல், தேசிய துணைப்பிரிப்பு ஒருங்கிணைந்த சுங்க தொடர் இலக்கத்தை உருவாக்குவதற்காகவும் மற்றும் ஒருசில தெரிவு செய்யப்பட்ட பண்டங்களின் அடிப்படையில் சுங்க இறக்குமதி வரியை திருத்தம் செய்வதற்காக 1962 ஆம் ஆண்டு 19 ஆம் இலக்க வருமானப் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் கட்டளையொன்று நிதி அமைச்சர் அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, குறித்த கட்டளைகள் மற்றும் ஆணைகளின் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காக நிதி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

13. ஜப்பானின் கருத்திட்டம் அல்லாத பிரதான உதவிகள் முன்மொழிவு முறையின் கீழ் தேசிய தாவரத் தொற்றுக்காப்பு சேவைகளுக்குத் தேவையான உபகரணங்களை விநியோகித்தல்
விவசாயத் துறை மற்றும் மற்றும் அதனுடன் தொடர்புடைய வியாபாரத் துறையின் அபிவிருத்திக்காக நோய்களற்ற மற்றும் கிருமித் தொற்றில்லா ஆராக்கியமான தாவரங்கள் மற்றும் தாவர வளர்ப்பு உற்பத்திகளை சர்வதேச ரீதியாக விற்பனை செய்தல் அவசியமாகும்.

அவ்வாறான வர்த்தக நடவடிக்கைகளுக்கு வசதிப்படுத்துவதற்காக தேசிய தாவரத் தொற்றுக்காப்பு சேவை நிறுவப்பட்டுள்ளது. 2022/2023 நிதியாண்டுக்கான சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்தி திட்டங்களின் கீழ் கருத்திட்டம் அல்லாத பிரதான உதவிகள் முன்மொழிவு முறையின் ஊடாக 500 மில்லியன் ஜப்பான யென் (கிட்டத்தட்ட 880 மில்லியன் ரூபாய்கள்) உபகரண ரீதியான உதவி வழங்கலை தேசிய தாவரத் தொற்றுக்காப்பு சேவையின் நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்கு வழங்குவதற்காக ஜப்பான் அரசாங்கம் உடன்பாடு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, குறித்த உதவி வழங்கலைப் பெற்றுக்கொள்வதற்கு ஜப்பான அரசாங்கத்துடன் பரிமாற்றல் பத்திரத்தில் கையொப்பமிடுவதற்கு நிதி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

14. ஏற்றுமதி முன்னேற்றத்தின் அடிப்படையில் ஊக்குவிப்புக் கொடுப்பனவு முன்மொழிவை நடைமுறைப்படுத்தல்
ஏற்றுமதியாளர்கள் முகங்கொடுத்துள்ள அதிக பணவீக்கம், மோசமான அந்நிய செலாவணிப் பற்றாக்குறை, உற்பத்தி மூலப்பொருட்களின் இறக்குமதி வரையறைகள் மற்றும் அதிக நடவடிக்கைச் செலவுகள் போன்ற சிரமங்களைக் குறைத்துக் கொள்வதற்கும், சென்ற வருடத்தில் பெற்றுக்கொண்ட ஏற்றுமதி செயலாற்றுகையைத் தாண்டிய முன்னேற்றத்தை இவ்வருடத்தில் பெற்றுக்கொள்வதற்கு இயலுமை கிட்டும் வகையில் ஏற்றுமதியாளர்களை ஊக்குவிக்கும் முன்மொழிவை நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

குறித்த முன்மொழியப்பட்டுள்ள ஊக்குவிப்புக் கொடுப்பனவு முறையை நடைமுறைப்படுத்துவதன் மூலம் 2021 ஆம் ஆண்டு ஏற்றுமதி வருமானத்தை 5,500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மேலதிக வருமானமாக 2022 ஆம் ஆண்டில் ஈட்டுவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

அதற்கமைய, கடந்த வருடத்தின் இயைபுடைய காலாண்டுடன் ஒப்பிடுகையில் குறைந்தது 10% வீதமான முன்னேற்றத்தைக் கண்டுள்ள நிறுவனங்களுக்கு முன்மொழியப்பட்டுள்ள ஊக்குவிப்புக் கொடுப்பனவு முறையின் கீழ் கடந்த வருடம் முதற் காலாண்டில் ஈட்டிய ஏற்றுமதி வருமானத்தை விடவும் மேலதிகமாக ஈட்டுகின்ற ஒவ்வொரு அமெரிக்க டொலருக்கும் 30 ரூபா வீதம் ஊக்குவிப்புக் கொடுப்பனவை செலுத்துவதற்கு வர்த்தக அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


Add new comment

Or log in with...