நாட்டின் மிகப்பெரிய சீமெந்து தொழிற்சாலையின் பணிகள் ஜனாதிபதி பிரதமர் தலைமையில் ஆரம்பம்

நாட்டின் மிகப்பெரிய சீமெந்து தொழிற்சாலையின் பணிகள் ஜனாதிபதி பிரதமர் தலைமையில்  ஆரம்பம்-Sri Lanka's Largest Cement Factory Production Begins

- மாகம்புரவில் 250 ஏக்கரில் 400 மில். டொலர் செலவில் புதிய உருக்கு தொழிற்சாலைக்கும் அடிக்கல்

மாகம்புர லங்கா கைத்தொழில் வலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட இந்நாட்டின் மிகப்பெரிய சீமெந்து தொழிற்சாலையான “லங்வா சங்ஸ்தா சிமென்ட் கோப்பரேஷன் (பிரைவெட்) லிமிடெட்” நிறுவனத்தின் உற்பத்தி நடவடிக்கைகள் இன்று (07) முற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.

நிகழ்விடத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி மற்றும் பிரதமர் நிர்மாணிப்பதற்கு உத்தேசித்துள்ள புதிய உருக்குத் தொழிற்சாலைக்கான அடிக்கல்லை நாட்டி வைத்தனர். 250 ஏக்கர் நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்படும் புதிய உருக்கு ஆலைக்கான முதலீடு 400 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும். இதன் உற்பத்திச் செயல்முறை 2024 இன் பிற்பகுதியில் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

புதிய சீமெந்து தொழிற்சாலையை திறந்து வைத்து, ஜனாதிபதி மற்றும் பிரதமர் பெயர்ப் பலகையை திரைநீக்கம் செய்ததுடன் தொழிற்சாலை வளாகத்தையும் பார்வையிட்டனர்.

2020 மார்ச் மாதம்  நிர்மாணப் பணிகளைத் தொடங்கிய தொழிற்சாலைக்கான முதலீடு 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும். 63 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளதுடன், நவீன வசதிகளைக் கொண்ட  இத் தொழிற்சாலை, தெற்காசிய பிராந்தியத்தில் மிகப்பெரிய சீமெந்து தொழிற்சாலைகளில் ஒன்றாகும். இத்தொழிற்சாலையின் வருடாந்த உற்பத்திக் கொள்ளளவு 04 மில்லியன் மெட்ரிக் தொன்கள் எனவும், முதற்கட்டமாக 2.8 மில்லியன் மெட்ரிக் தொன்களை உள்நாட்டுச் சந்தைக்கு வழங்கும் எனவும் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கன்வேயர் பெல்ட்கள் (Coovered Conveyer Belt)  அதிக திறன், வீண்விரயம் மற்றும் சூழல் மாசடைவதைக் குறைக்க துறைமுகத்திற்கும் தொழிற்சாலைக்கும் இடையே மூலப்பொருளைக் கொண்டு செல்லப் பயன்படுகிறது, மேலும் ஒரு முழுமையான தானியங்கி ஸ்டேக்கர் ரீக்ளைமர் யார்டு (Stacker Reclaimer Yard)  மற்றும் பிரிஜ் டைப் சிப் அன்லோடர் (Bridge Type Ship Unloaders)  இரண்டையும் தொழிற்சாலைக் கொண்டுள்ளது. சர்வதேசப் போக்குகளுக்கு ஏற்ப தொழிலாளர்களுக்குப் பதிலாக தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பொருட்களைக் கையாள இது உதவும். லங்வா சங்ஸ்தா சீமெந்து தொழிற்சாலையானது சாதாரண போர்ட்லேண்ட், போர்ட்லேண்ட் கொம்பசிட் மற்றும் பிலென்டட் ஹைட்ராலிக்ஸ் உள்ளிட்ட அனைத்து வகையான சீமெந்துகளையும் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தொழிற்சாலையின் உற்பத்தி நடவடிக்கைகள் ஜனாதிபதியினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பின்னர் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய லங்வா சங்ஸ்தா சீமெந்து தனியார் நிறுவனத்தின் தலைவர் நந்தன லொகுவிதான, தொழிற்சாலையின் உற்பத்தி நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட்டதன் பின்னர், இந்நாட்டின் சீமெந்து தேவையை உள்நாட்டு உற்பத்தியைக் கொண்டே நிறைவு செய்துகொள்ள முடியுமென்று குறிப்பிட்டார்.

வரட்சி மிக்க வலயமாக இருந்த அம்பாந்தோட்டை, 5ஆவது நிறைவேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நீண்டகால திட்டங்களின் மூலம் முற்றாக மாற்றமடைந்துள்ளதாக அமைச்சர் சமல் ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார்.

இத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதன் பிரதிபலனாக பிரதேச இளைஞர்கள் எதிர்கால எதிர்பார்ப்புடன் செயற்படுவதாக அமைச்சர் தெரிவித்தார்.

அரசாங்க அதிகாரிகள், முதலீட்டாளர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் ஒத்துழைப்பு வழங்க வேண்டியதன் அவசியத்தையும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

தெற்காசியாவில் மிகவும் பலவீனமான பொருளாதாரத்துடன் ஏற்றுக்கொண்ட நாட்டை, சகல சவால்களுக்கும் முகங்கொடுத்து முன்னோக்கி கொண்டு சென்று நாட்டுக்குத் தேவையான அனைத்தையும் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யும் பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது என இராஜாங்க அமைச்சர் டி.வி. சானக தெரிவித்தார்.

நாட்டில் இதுவரை 14 முதலீட்டு வலயங்கள் உள்ளன. 2024ஆம் ஆண்டின் இறுதிக்குள் 11 புதிய முதலீட்டு வலயங்களை நிறுவ அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது. அதன் மூலம் ஏற்றுமதி பொருளாதாரத்தை மேம்படுத்தி, உள்நாட்டுப் பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியுமென டி.வி. சானக மேலும் தெரிவித்தார்.

அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள், அரச அதிகாரிகள் மற்றும் லங்வா நிறுவனத்தின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.


Add new comment

Or log in with...