- தேசிய காங்கிரஸ் தலைவர் அதாஉல்லாஹ் எம்.பி.
அம்பாறை மாவட்டத்தின் பெயரினை மாற்றுவதாக இருந்தால் மக்களின் ஏகோபித்த அபிப்பிராயம் பெறப்பட வேண்டும் என தேசிய காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாஉல்லாஹ் தெரிவித்தார்.
இன்றைய தினம் (06) அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை கேட்போர் கூட்டத்தில் இடம்பெற்ற, 280 சமூக ஆளுமைகள் பற்றி, கவிஞர் ஈழமதி ஜப்பார் எழுதிய "மதி பாடும் நதிகள்" கவிதை நூல் வெளியீட்டு விழா நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரை நிகழ்த்தும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் அவர் அங்கு உரையாற்றுகையில் ;
கிழக்கில் ஏற்கனவே இருந்த மாவட்டங்களில் மட்டக்களப்பு மாவட்டம் ஒன்றாகும். இதில் நமது முன்னோர்களின் பிறப்பு, இறப்பு, காணிப்பதிவுகள் என்பன அங்கு இருந்தன .
1960 ம் ஆண்டு மட்டக்களப்பின் தென்பகுதிக்கு ஒரு கச்சேரி கொடுக்கப்படவேண்டும் என்று கருத்துக்கள் வந்த போது, 1960 ம் ஆண்டிலே, அக்கரைப்பற்றில் அந்த கச்சேரி அமையப்பெற்றது. இது வரலாறு. அப்படி இருக்கும் பொழுது இது அக்கரைப்பற்றிலிருந்து 06 மாதங்களுக்குப்பிறகு உஹனை பிரதேசத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அதன் பிறகு கல்லோயா அபிவிருத்தி திட்டம் நடைபெற்று அதன் மாவட்ட பெரும் காரியாலயமாகவிருந்த, தற்போதைய கச்சேரி காரியாலயத்தில்தான் அம்பாறை கச்சேரி இருந்தது.
அம்பாறை எனும் பெயரும் இந்த மாவட்டத்தின் பெயரும் இவ்வாறு இருக்கும் பொழுது, திடீரென இம்மாவட்டத்தின் பெயரினை, அதன் எல்லையை திகாமடுல்ல என மாற்றவேண்டும் என கடந்த வாரம் முன்மொழியப்பட்டது. இருந்தாலும், தங்களது மாவட்டத்தில் வாழும் மக்கள் தங்களது மாவட்டத்தின் பெயர் எவ்வாறு இருக்க வேண்டும் என எண்ணுவதற்கு அவர்களுக்கு உரிமையுள்ளது. அவ்வாறு பெயரினை மாற்றுவதாக இருந்தால் இங்கு வாழுகின்ற மக்கள் எல்லோருடைய அபிப்பிராயத்துடன் அது மாற்றப்பட்ட வேண்டும். அப்படி மாற்றப்படுகின்ற பொழுது நான் முன்பு கூறிய வரலாறுகள் அதில் பேசப்பட்ட வேண்டும்.
அதே போன்று காணிகள் தொடர்பாக கேட்கின்ற பொழுது, கடைசியாக இந்தப் பிரதேசம் 1990 ம் ஆண்டுகளுக்குப்பிறகுதான் உருவாக்கப்பட்டது. அதற்கு முன்பு ஒவ்வொரு பற்றுக்களாக தமிழர்களும் முஸ்லிம்களும், சிங்கள மக்களும் வாழ்ந்தார்கள். ஒரு இடத்தில், ஒரு பெயரில் வாழ்ந்த தமிழ், முஸ்லிம் மக்களுக்கு திட்டமிடப்பட்டு கடந்த காலங்களில் வெவ்வேறு செயலகங்களாக பிரித்துக் கொடுக்கப்பட்டது. காணிகள் எல்லா மக்களும் பாவிக்கக்கூடிய வகையில் பிரித்துக் கொடுக்கப்பட்டு இன்றைக்கு முஸ்லிம்கள் என்று போனால், அது அவர்களுடைய பிரதேசம் அல்ல. இது தமிழர்களுடைய பிரதேசம் அல்லது சிங்களவர்களுடைய பிரதேசம் என்று காணிகளை கபளீகரம் செய்கின்ற நிலைமைகள் இருக்கின்றன.
கடந்த காலங்களில் இடம்பெற்ற கலவரங்களை எடுத்துக் கொண்டால், அதன் பின்னால் இனவாதம் அல்லது இனத்துவேசம் இருப்பதனை நாம் அறிகின்றோம். எனவே, ஒரே நாடு ஒரே சட்டம் என்று கூறும் அளவிற்கு இனவாதம் உச்சத்தில் தோற்று விக்கப்பட்டுக் கொண்டே வந்திருக்கிறது. ஒரே நாடு ஒரே சட்டம் எனும் தொனியில் நாம் மிகவும் தெளிவாக இருக்கிறோம். எந்த சட்டமாக இருந்தாலும் மார்க்கங்களை அது கட்டுப்படுத்த முடியாது! ஏனென்றால் மார்க்கம் என்பது இலங்கைக்கு மட்டும் உரித்தானது அல்ல. இது உலக மக்கள் எல்லோரும் கையாளும் ஒன்றாகும்.
தற்போதைய சில வெளிநாட்டு சக்திகள் நமது நாட்டை இன்னமும் அடிமைப்படுத்தி, தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கலாம் என எண்ணியுள்ளனர். அவர்களே அரசியலை தீர்மானிக்கின்றவர்களாக மாறியிருக்கிறார்கள். பாராளுமன்ற சக்தியையும், ஜனாதிபதியை தீர்மானிக்கின்றவர்களாகவும் இருந்திருக்கிறார்கள். இருந்த போதும் தேசிய காங்கிரஸ் முன்னாள் ஜனாதிபதியும், தற்போதைய பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷவினை நேசித்ததுக்கொண்டே வந்திருக்கிறது. ஏனென்றால் அவர் இந்த கிழக்கு மக்களுக்கு நல்லவைகளை செய்துள்ளார் என்பதற்காக.
இன்று நாட்டில் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் மாற்றங்கள், வினோதமான நிகழ்வுகள் இவைகள் தொடர்பாக மக்களுக்கு அறிவூட்டவேண்டிய காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த நாட்டில் அரசியல் அமைப்புக்கள் 20 வரை சென்று விட்டது. சுதந்திரத்திற்கு பின்னர் இந்நாட்டு மக்கள் எப்படி இருந்தார்களோ அதே நிலையில் தான் அனைத்து இந மக்களும் வாழ வேண்டும். சுதந்திரத்திற்கு முன்பு அடிமையாக இருந்த மாதிரி, சுதந்திரத்திற்கு பின்னர் அடிமையாக வாழ முடியாது. இந்த விடயத்தில் தேசிய காங்கிரஸ் மிகத்தெளிவாக இருக்கிறது என்றார்.
(நிந்தவூர் குறூப் நிருபர் - சுலைமான் றாபி)
Add new comment