அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவிப்பு
விமல், கம்மன்பிலவுக்கு நீதி கிடைக்கும் வரை விலகியே இருப்பேன்
தமது குழு எதிர்க்கட்சியுடன் ஒருபோதும் இணையப் போவதில்லையென அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
அதேவேளை, தாம் மாற்று வேலைத்திட்டமொன்றை ஆரம்பிக்க போவதாகவும் அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளின் பிரதிநிதிகள் குழு நேற்று தெரிவித்துள்ளது.
அமைச்சர் விமல் வீரவன்ச மற்றும் அமைச்சர் உதய கம்மன்பில ஆகியோர் நேற்று முன்தினம் அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதையடுத்து அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளின் பிரதிநிதிகள் நேற்றைய தினம் கொழும்பில் விசேட செய்தியாளர் மாநாடொன்றை ஏற்பாடு செய்திருந்தனர். அந்த ஊடகவியலாளர் மாநாட்டில் விளக்கமளிக்கும் போதே அமைச்சர் வாசுதேவ நாணயக்கார இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன் போது மேலும் தெரிவித்த அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, அமைச்சுப் பதவிகளிலிருந்து நீக்கப்பட்டுள்ள விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோருக்கு நீதி கிடைக்கும் வரை தாம் தமது அமைச்சு பதவிக்குரிய செயற்பாடுகளிலிருந்து விலகியிருக்கப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.
அதேவேளை, தாம் தொடர்ந்தும் 11 கட்சிகளில் கூட்டணியுடன் இணைந்து செயற்படப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோரும் கருத்துக்களை முன்வைத்தனர்.
தற்போதைய ஜனாதிபதியின் தலைமையிலான அரசாங்கத்தில் எதிர்காலத்தில் எந்தவொரு அமைச்சர் பதவியையும் பொறுப்பேற்கத் தயாரில்லையென முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
அமைச்சர்கள் இருவரும் தமது பதவிகளிலிருந்து நீக்கப்பட்டமை பிரச்சினை இல்லை என்றும் பதவி இருந்தாலும் இல்லாவிட்டாலும் குழுவின் போராட்டம் தொடரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நாடு வரலாற்றில் ஒருபோதும் இல்லாதவாறு பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர்,
இந்த நெருக்கடி நிலை தொடர்ச்சியாக இருந்து வந்துள்ளது. அமைச்சரவையிலும் அது தொடர்பில் சிக்கல்கள் தொடர்ந்தன. 20ஆவது அரசியலமைப்பு திருத்தம் கொண்டு வரப்பட்டு சூழ்நிலையோடு இந்த நெருக்கடி நிலை ஆரம்பித்தது.
மக்கள் ஆதரவில் அமைச்சராக வந்த நாம் அதனை கடுமையாக எதிர்த்து வந்துள்ளோம். அப்போது சிக்கல் ஏற்பட்டது. அதேபோன்று துறைமுகத்தில் கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்குவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தின் போதும் சிக்கல்கள் ஏற்பட்டன. அதையடுத்து யுக தனவி மின் உற்பத்தி நிலைய பங்குகளை அமெரிக்காவுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் போதும் எதிர்ப்புகள் கிளம்பின. அவை அனைத்துமே கொள்கை ரீதியான நெருக்கடிகளாகும். தனிப்பட்ட சிக்கல்கள் அல்ல. தற்போது நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலையிலும் சிக்கல்கள் எழுந்துள்ளன.
இத்தகைய நிலைக்கு மத்தியில், நாட்டில் எந்த பிரச்சினையும் கிடையாது, எதிர்வரும் காலத்தில் நாம் முன்னேறுவோம் என வெறுமனே கூறிக்கொண்டிருக்க எம்மால் முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
லோரன்ஸ் செல்வநாயகம்
Add new comment