நுவரெலியா விடுதி அறையில் கணவன் மனைவி சடலமாக மீட்பு

நுவரெலியா விடுதி அறையில் கணவன் மனைவி சடலமாக மீட்பு-Body of a Couple Found at a Hotel Room in Nuwara Eliya

நுவரெலியா விடுதி அறையொன்றில் தங்கியிருந்த கணவன் மனைவி சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

குருணாகல், கொக்கரல்ல பகுதியிலிருந்து உல்லாசப் பிரயாணிகளாக நுவரெலியாவிற்கு வருகை தந்த ஆண் (59) ஒருவரும் பெண் (57) ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இது தொடர்பான விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இது தொடர்பாக தெரியவருவதாவது

நேற்றையதினம் (26) குருணாகல் பகுதியில் இருந்து ஒரு குழுவினர் தங்களுடைய விடுமுறையை கழிப்பதற்காக நுவரலியாவிற்கு வருகை தந்து நுவரெலியாவிலுள்ள தனியார் விடுதி ஒன்றில் தங்கியுள்ளனர்.

இதன்போது இவர்கள் தங்களுடைய இரவு உணவுத் தேவைக்காக பயன்படுத்திய 'பாபிகியுவ்'  (Barbecue) இயந்திரத்தை குளிரிலிருந்து பாதுகாத்து கொள்வதற்காக அறைக்குள் வைத்து நித்திரைக்கு சென்றுள்ளனர்.

இதன்போது குறித்த இயந்திரத்தில் இருந்து வெளியேறிய நச்சு வாயு காரணமாக இவர்கள் உயிரிழந்திருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

குறித்த தங்கும் விடுதியில் உறவினர்கள் 6 பேர் இருந்துள்ளதோடு, குறித்த தம்பதியினரின் மகள் காலை வேளையில் அவர்கள் தூங்கிக் கொண்டிருந்த அறையை தட்டி அழைத்த போதிலும் எவ்வித பதிலும் கிடைக்காத நிலையில், மாற்றுத் திறப்பை பயன்படுத்தி கதவை திறந்து பார்த்தபோது, அவர்கள் மரணமடைந்துள்ளமை தெரிய வந்துள்ளது.

குறித்த அறையில் BBQ அடுப்பொன்றும் இருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மரணம் தொடர்பான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனத் தெரிவித்துள்ள பொலிஸார், மரண விசாரணைகளின் பின்னர் சடலம் இன்றையதினம் (27) நுவரெலிய மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு பிரேத பரிசோதனை இடம்பெற்றதன் பின்பு உறவினர்களிடம் ஒப்படைக்கப்ட இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு இதே போன்றதொரு சம்பவம் நுவரெலியாவில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

நுவரெலியா தினகரன் நிருபர்


Add new comment

Or log in with...