தூதுவர்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்த அரசு தீர்மானம்
எக்காரணம் கொண்டும் எரிபொருள் விலையை அதிகரிப்பதில்லையென அமைச்சரவையில் முடிவு
லோரன்ஸ் செல்வநாயகம், ஷம்ஸ் பாஹிம்
எரிபொருள் விலையை அதிகரிப்பதில்லையென அமைச்சரவையில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக, பெற்றோலிய வளத்துறை அமைச்சர் உதய கம்மன்பில பாராளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார்.
உக்ரைன் - ரஷ்யாவுக்கிடையிலான மோதல் உக்கிரமடைந்துள்ள இச்சந்தர்ப்பத்தில், உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை அதிகரித்துள்ளதாக குறிப்பிட்ட அமைச்சர், எவ்வாறெனினும் எரிபொருள் விலையை அதிகரிப்பதில்லையென்ற தீர்மானம் அமைச்சரவையில் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். எனினும் நாட்டில் தற்போது டீசல் பற்றாக்குறை நிலவுவதாகவும் அமைச்சர் சபையில் தெரிவித்தார்.
அதேவேளை, மசகு எண்ணெய் உற்பத்தியில் ஈடுபடும் சகல சர்வதேச நாடுகளின் தூதுவர்களையும் எதிர்வரும் மார்ச் 15 ஆம் திகதி வரவழைத்து, நீண்டகால கடன் திட்டத்துக்கமைய எரிபொருளை பெற்றுக்கொள்ள பேச்சுவார்த்தையை நடத்தவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று (23) வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையில், நாட்டின் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் எரிபொருள் விலையேற்றம் தொடர்பாக ஆளுங்கட்சி எம்பி மொஹமட் முஸம்மில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் உதய கம்மன்பில இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் எந்தவித தடைகளுமின்றி செயற்பட வேண்டுமானால் மாதாந்தம் ஒரு இலட்சத்து 81 ஆயிரம் மெற்றிக்தொன் மசகு எண்ணெய் தேவைப்படுகிறது.
அந்த வகையில் வருடாந்தம் 2.16 மில்லியன் மெற்றிக் தொன் மசகு எண்ணெய் தேவைப்படுகிறது. ஒரு வருடத்துக்கு அண்ணளவாக ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் மசகு எண்ணெய் கொள்வனவுக்காக ஒதுக்கப்படுகின்றன. எனினும் தற்போதைய விலை நிர்ணயத்துக்கமைய மாதத்திற்கு 500 மில்லியன் டொலர்கள் எரிபொருள் கொள்வனவுக்காக செலவிடப்படுகிறது.
எரிபொருள் தட்டுப்பாடு,மருந்து தட்டுப்பாடு, ஏனைய அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு, மின்சார தட்டுப்பாடோவன்றி டொலர் தட்டுப்பாடும் வெளிநாட்டு கையிருப்பு இல்லாமையுமே அனைத்துப் பிரச்சினைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
எனினும் தற்போது நாட்டுக்கு வந்துள்ள மூன்று எரிபொருள் கப்பல்களில், இரண்டு கப்பல்களுக்கு நிதி செலுத்தி எரிபொருளை இறக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மூன்றாவது கப்பலுக்கான நிதி இதுவரை செலுத்தப்படவில்லை. நாட்டில் தற்போது டீசல் தட்டுப்பாடு நிலவுகின்றமை உண்மையே.எம்மிடமுள்ள டீசலை மட்டுப்படுத்தியே விநியோகித்து வருகிறோம்.
எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்படுமென அவ்வப்போது கருத்துக்கள் முன்வைக்கப்பட்டதால், எரிபொருள் பதுக்கல் இடம்பெற்றமையும் உண்மையே,
எனினும், இன்றுள்ள சூழ்நிலையில் ரஷ்யா- உக்ரைன் மோதல் நிலைமைகள் காரணமாக இன்று நள்ளிரவுடன் உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை அதிகரிக்கும் சந்தர்ப்பங்கள் உள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த டிசம்பர் தொடக்கம் நேற்று வரையில் 38 வீதத்தினால் எரிபொருள் விலை அதிகரித்துள்ளது. எனினும், எரிபொருள் விலையை நாம், அதிகரிக்கவில்லை. அதேபோன்று நேற்று கூடிய அமைச்சரவை கூட்டத்தில் நீண்ட கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளது. எரிபொருள் விலையை அதிகரிப்பதில்லையென்ற தீர்மானமும் அங்கு எடுக்கப்பட்டுள்ளது.
ஆசிய நாடுகளில் இலங்கையில் மட்டுமே குறைந்த விலையில் எரிபொருள் வழங்கப்படுகின்றது.
அதேபோல், மார்ச் மாதம் (15) உலகில் மசகு எண்ணெய் உற்பத்தியில் ஈடுபடும் சகல நாடுகளினதும் தூதுவர்களை வரவழைத்து நீண்டகால கடன் திட்டத்துக்கமைய, தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கான பேச்சுவார்த்தை நடத்த தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
Add new comment