களஞ்சியசாலையில் 3 இலட்சம் கி.கி. பழைய நெல்; 2 அதிகாரிகள் பணி இடைநிறுத்தம்

களஞ்சியசாலையில் 3 இலட்சம் கி.கி. பழைய நெல்; 2 அதிகாரிகள் பணி இடைநிறுத்தம்-300,000 kg Old Paddy Found at Nikaweratiya-2 Officers

- விசாரணை CID யிடம்

நிக்கவெரட்டிய பிரதேசத்தில் காலாவதியான நெல்லை கொள்வனவு செய்து களஞ்சியப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் விவசாய திணைக்களத்தின் வடமேல் பிராந்திய முகாமையாளர் மற்றும் உதவி பிராந்திய முகாமையாளர் ஆகியோர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இரண்டு நெல் களஞ்சியசாலைகளில் பழைய நெல் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாக வடமேல் விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளிடமிருந்து அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகேவுக்கு கிடைத்த இரகசியத் தகவல் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு அறிவித்துள்ளது.

குறித்த களஞ்சியங்களில் சுமார் 1.5 மில்லியன் கிலோகிராம் நெல் சேமித்து வைக்கப்பட்டிருப்பதாகவும், அதில் 300,000 கிலோகிராம் நெல் மிகவும் பழமையானதாகவும் கால்நடை தீவனமாக பயன்படுத்தப்பட வேண்டியது என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதன்படி, சட்ட விரோதமாக நெல்லை கொள்வனவு செய்து களஞ்சியப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கடமையாற்றும் வடமேல் பிராந்திய முகாமையாளர் மற்றும் களஞ்சியசாலைக்கு பொறுப்பான உதவி பிராந்திய முகாமையாளர் ஆகியோர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

நிக்கவெரட்டிய பிரதேசத்திலுள்ள குறித்த இரண்டு நெல் களஞ்சியசாலைகளும் கணக்காய்வாளர்களால் சீல் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இச்சம்பவம் குறித்து விவசாய அமைச்சும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக, அமைச்சு விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவித்துள்ளது.


Add new comment

Or log in with...