மட்டக்களப்பு மாவட்டத்தில் 2147 பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம்

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்,சந்திரகாந்தன் எம்.பி உள்ளிட்டோர் பிரதம அதிதி

நாட்டைக் கட்டியெழுப்பும் சுபிட்சத்தின் நோக்கு கொள்கைப் பிரகடனத்திற்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 2147பட்டதாரி பயிலுனர்களுக்கு நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.  

இதனடிப்படையில் அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் கீழ் இணைப்புச் செய்யப்பட்ட 287பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கருணாகரன் தலைமையில் செவ்வாய்க்கிழமை (25) மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் நடைபெற்றது.  

பின்தங்கிய கிராம பிரதேச அபிவிருத்தி, வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறுபொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவனேசதுரை சந்திரகாந்தன் ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்துகொண்ட இந் நிகழ்வின் போது, மாவட்ட செயலகம் மற்றும் 14பிரதேச செயலகங்களுக்கு இணைப்புச் செய்யப்பட்ட 287பட்டதாரிகளுக்கான நிரந்தர நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் மாவட்ட செயலகத்திற்கு 13பேரும், ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்திற்கு 19, ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்திற்கு 14, காத்தான்குடி பிரதேச செயலகத்திற்கு 12 , கோறளைப்பற்று பிரதேச செயலகத்திற்கு 7, கோறளைப் பற்று மத்தி பிரதேச செயலகத்திற்கு 8, வாகரை மற்றும் கிரான் பிரதேச செயலகங்களுக்கு தலா 26பேரும் இணைப்புச் செய்யப்பட்டுள்ளனர்.  

இதுதவிர கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலகத்திற்கு 8பேரும், மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு 23, மண்முனைப்பற்று பிரதேச செயலகத்திற்கு 15, களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்திற்கு 48, பட்டிப்பளை பிரதேச செயலகத்திற்கு 21, வவுனதீவு பிரதேச செயலகத்திற்கு 18, வெல்லாவெளி பிரதேச செயலகத்திற்கு 23பேருமாக 281பேர் நிரந்தர நியமனக் கடிதங்களைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.  

மேலும் பயிற்சிக் காலத்தினைப் பூர்த்தி செய்யாதவர்களுக்கும் இதன்போது நிரந்தர நிலையத்திற்கான இணைப்புக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளதுடன், அவர்களது பயிற்சிக் காலம் நிறைவுற்றதும் அந்நிலையத்திலேயே அவர்கள் நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

இதன்போது இராஜாங்க அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர் உள்ளிட்டோர் கருத்துத் தெரிவிக்கையில், அரசாங்கம் எதிர்நோக்கியுள்ள இக்கட்டான சவால்களுக்கு மத்தியில் இந்நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக அந்தந்த மாவட்டத்தில் நியமனம் பெற்றுள்ள நீங்கள் அதிஸ்டசாலிகள்.

கடந்தமுறை பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கும்போது வெவ்வேறு மாவட்டங்களில் வழங்கப்பட்டுள்ளது. எனினும் இந்நியமனத்தினைப் பெற்றுக் கொள்ளும் அனைவரும் குறைந்த பட்சம் இரண்டு வருடங்களாவது தங்களுக்கு வழங்கப்படும் நிலையங்களில் பணியாற்றும்படி கேட்டுக் கொண்டனர்.

கல்லடி குறூப் நிருபர்

 


Add new comment

Or log in with...