காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் நீதி அமைச்சருடன் கலந்துரையாட சந்தர்ப்பம்

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் நீதி அமைச்சருடன் சந்தித்து தமது கோரிக்கைகள் தொடர்பில் கலந்துரையாட சந்தர்ப்பம் ஏற்படுத்தி தரப்படும் என நீதி சேவை ஆணைக்குழுவின் சிரேஸ்ட உதவி செயலாளர் ரோகினி ஹெட்டிஹே தெரிவித்துள்ளார்.

நீதிச் சேவை ஆணைக்குழுவின் வடமாகாணத்திற்கான நடமாடும் சேவையின் முதல் நாள் சேவை வவுனியா மாவட்ட செயலகத்தில் நேற்று (26) நடைபெற்றது.

இதன்போதுகாணாமல் ஆக்கப்பட்டேரின் உறவுகள் மாவட்ட செயலகம் முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், மாவட்ட செயலகத்தில் நடமாடும் சேவையில் ஈடுபட்ட நீதி அமைச்சின் கீழான உயர்மட்ட அதிகாரிகளை சந்தித்து தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இதன்போது  நீதி சேவை ஆணைக்குழுவின் சிரேஸ்ட உதவி செயலாளர் ரோகினி ஹெட்டிஹே உள்ளிட்ட நீதிச்சேவை ஆணைக்குழு அதிகாரிகள்,காணாமல் போனவர்கள் பற்றிய அலுவலகத்தின் அலுவலர்கள், இழப்பீடுகளுக்கான அலுவலகத்தின்  அலுவலகர்கள் ஆகியோர்  கலந்துரையாடியதுடன், அவர்களின் நோக்கம் மற்றும் செயற்றிட்டத்தினை தெளிவுபடுத்தியிருந்தனர்.

மேலும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளை  நீதி அமைச்சர் அலி சப்ரி நேரில் சந்தித்து கலந்துரையாடுவதற்கும், அவர்களது கோரிக்கைகளை முன்வைப்பதற்கும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி தருவதாகவும் கூறினர்.

இதற்கு பதில் அளித்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்,  இந்த அரசே எமது பிள்ளைகளை காணாமல் ஆக்கியது. அவர்களிடம் இருந்து எமக்கான நீதி எவ்வாறு கிடைக்கும். இதுவரை அமைக்கப்பட்ட ஆணைக் குழுக்களுக்கும், விசாரணைகளுக்கும் என்ன நடந்தது?

மரணச்சான்றிதழையும், இழப்பீட்டையும் ஒரு போதும் நாம் பெற்றுக்கொள்ள மாட்டோம். அலுவலகம் வேண்டாம் என்கிறோம். நீங்கள் ஏன் அதனை எமக்கு திணிக்கின்றீர்கள். இனிமேல் இங்கு ஓ.எம்.பி  (OMP) அலுவலகம் என்று வரவேண்டாம் எனத் தெரிவித்து விட்டுச் சென்றனர்.

(வவுனியா விசேட நிருபர்)


Add new comment

Or log in with...