கலாநிதி பாபு சர்மா குருக்கள்
இந்நாட்டில் பௌத்த சமய, கலாசாரத்திற்கு வழங்கப்படும் கௌரவத்தையும் அந்தஸ்தையும் போன்றே பிற சமய கலாசார பண்பாடுகளுக்கும் இன்றைய அரசினால் கௌரவமளிக்கப்பட்டு வருகின்றன என பிரதமரின் இந்து மத விவகார இணைப்பாளர் சிவபதி இராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா தெரிவித்தார்
மாத்தளை கந்தேநுவர தமிழ் வித்தியாலயத்தில் இடம்பெற்ற கலைமகளின் தெய்வீக கிராமிய நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
மாத்தளை இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி சங்கீதா கோபிநாத் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அவர் மேலும் கூறுகையில்
சமூக கலாசார பண்புகளை உரியமுறையில் பின்பற்றுபவர்கள் சமூகத்தின் உயர்ந்த ஒழுக்க விழுமியங்களுடன் வாழ்வதற்கான பயிற்சிப் பட்டறையாக அறநெறிப் பாடசாலைகள் காணப்படுகின்றன. இவற்றைக் கருத்திற்கொண்டு நாடளாவிய ரீதியில் மாவட்டங்கள் தோறும் தெய்வீக கிராமிய நிகழ்வுகள் இந்து கலாசார திணைக்களத்தின் ஊடாக இடம்பெற்று வருகின்றன. தாம் சார்ந்த சமூக கலாசார பண்புகளை உரியமுறையில் பின்பற்றுகின்ற எந்த ஒரு நபரும் பிறரோடு முரண்பட்டுக் கொள்ள மாட்டார்கள். பிற சமூகத்தை மதித்து வாழும் எண்ணம் கொண்டவராக இருப்பார். இத்தகையவர்கள் இன, மத சார்ந்த பிரச்சினைகள் சமூகத்தில் உருவாக மாட்டாது. இத்தகைய நற்பிரஜைகளை நாட்டில் உருவாக்கும் முகமாக தெய்வீக கிராமிய நிகழ்வுகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் எண்ணக் கருவில் செயற்பட்டு வருகின்றன என்றார்.
மாத்தளை சுழற்சி நிருபர்
Add new comment