ஆயிரமாயிரம் தியாகிகளின் உயிர்த் தியாகங்களுடன் உதயமான பாரத தேசம்

இந்தியா தனது 73வது குடியரசு தினத்தை ஜனவரி 26ஆம் திகதியான இன்று கொண்டாடுகிறது. குடியரசு தினத்தன்று ஒவ்வொரு ஆண்டும், புதுடெல்லியில் உள்ள செங்கோட்டையில் இந்திய தேசியக் கொடியான  மூவர்ணக்கொடியை இந்தியக் குடியரசுத் தலைவர் ஏற்றுவார். இந்தியக் கொடியின் வண்ணங்கள், அதன் வரலாற்று முக்கியத்துவம் மற்றும் பரிணாமம் ஆகியன புகழ்மிக்கன. 

 இந்தியாவில் சுமார் 200ஆண்டுகளுக்கும் மேல் நீடித்து வந்த ஆங்கில ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில் தேசிய அளவிலும், மாநில அளவிலும் பல கலகங்களையும், புரட்சிகளையும், அஹிம்சை வழியில் பல போராட்டங்களையும் நிகழ்த்தி தமது குருதியையும், தேகங்களையும் தமது தாய்நாட்டிற்காக அர்ப்பணித்த தேசத் தலைவர்களையும், வீரர்களையும், புரட்சியாளர்களையும் நினைவு கூரும் நாள் குடியரசு தினம் ஆகும்.

 ஆரம்ப காலத்தில் இந்திய மன்னர்கள் ஒற்றுமையாக இல்லாமல், இந்தியாவை சிறுசிறு மாநிலங்களாகப் பிரித்து ஆட்சி செய்து கொண்டிருந்ததால், வணிகம் செய்வதற்காக இந்தியாவில் நுழைந்த பிரிட்டிஷ்காரர்கள் படிப்படியாகத் தங்களுடைய ஆதிக்கத்தை ஏற்படுத்தி, இந்தியா முழுவதும் கொடுங்கோல் ஆட்சியை அரங்கேற்றினர்.

 அத்தகைய கொடுங்கோல் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து, 1947ஆம் ஆண்டு ஓகஸ்ட் 15ஆம் திகதி இந்தியா விடுதலை பெற்றது. இந்திய விடுதலைக்குப் பிறகு மக்களாட்சி மட்டுமே ஒரு நாட்டின் சிறப்பான வளர்ச்சிக்கு அடையாளம் எனக் கருதி ​ெடாக்டர் பி. ஆர். அம்பேத்கர் தலைமையில் இந்திய அரசியல் சட்டம் நிறைவேற்றப்பட்டு, 1950ஜனவரி 26முதல் குடியரசு தினமாகக் கொண்டாடப்படுகிறது. மேலும் தமது தாய்நாட்டை அந்நியர்களின் பிடியிலிருந்து காப்பாற்றி, பாரத மண்ணில் ஒவ்வொரு மனிதனும் சுதந்திரக் காற்றை சுவாசிக்க பாடுபட்ட தியாகிகளை நினைவு கூரும் வகையில் விடுமுறை அளிக்கப்பட்டு நாடெங்கும் அனைத்து பாடசாலைகளிலும், கல்லூரிகளிலும், அலுவலகங்களிலும் தேசிய கீதம் பாடி கொடியேற்றப்படுகின்றது.

 அன்றைய காலத்தில் ஆங்கிலேயர்களின் அடக்குமுறையைக் கண்டு வெகுண்ட மக்கள் நாளுக்கு நாள் போராட்டங்கள், கலகங்கள், புரட்சிகள் எனத் தொடங்கி பிரிட்டிஷ்காரர்களை இந்தியாவை விட்டே விரட்ட எண்ணினர். அதன் அடிப்படையில் 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்தியாவில் தேசியவாத உணர்வுகள்  காட்டுத் தீ போல் இந்திய மக்களிடையே பரவத் தொடங்கின.

 ‘இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி’ என்னும் அமைப்பில் ஒன்றிணைந்த இந்திய மக்கள், பல போராட்டங்களை ஆங்கில ஆட்சிக்கு எதிராக அரங்கேற்றினர். இறுதியில், 1947ஆம் ஆண்டு ஓகஸ்ட் 15ஆம் திகதி விடுதலை இந்தியா என்ற புதிய பாரதம் உதயமானது. 

   இந்திய விடுதலைக்குப் பிறகு, இந்திய அரசியல் நிர்ணய சபைத் தலைவராக ​ெடாக்டர் ராஜேந்திரப் பிரசாத் நியமிக்கப்பட்டார். அவரே விடுதலை இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராகவும் பொறுப்பேற்றார். அதன் பிறகு, இந்திய அரசியலமைப்பு வரைவுக்குழு அமைக்கப்பட்டு ​ெடாக்டர் பி. ஆர். அம்பேத்கர் தலைமையில் இந்திய அரசியல் அமைப்பு சாசனம் எழுதப்பட்டது. முகவுரை, விதிகள், அட்டவணைகள், பிற்சேர்க்கை, திருத்த மசோதாக்கள் போன்ற சிறப்பு அம்சங்களைக் கொண்டு நீண்ட ஆவணமாக எழுதப்பட்ட இந்த சாசனம், இந்திய அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக் கொள்ளப்பட்டு, மக்களாட்சியைக் குறிக்கோளாகக் கொண்டு நிறைவேற்றப்பட்டதால், 1930ஜனவரி 26ஆம் திகதியை நினைவுகூரும் வகையில் 1950ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26ஆம் திகதி இந்திய தேசிய குடியரசு தினமாக நடைமுறைப்படுத்தப்பட்டது. 

 குடியரசு என்பதன் பொருள் மக்களாட்சி ஆகும். அதாவது, தேர்தல் மூலம் மக்கள் விரும்பிய ஆட்சியாளர்களைத் தேர்தேடுத்துகொள்ளும் முறை குடியாட்சி எனப்படுகிறது. இந்திய விடுதலைக்குப் பிறகு 1950ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26ஆம் நாள் இந்திய தேசிய குடியரசு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள், இந்திய மூவண்ணக் கொடியை ஏற்றி இந்த குடியரசுதினக் கொண்டாட்டத்தை ஆரம்பித்து வைத்தார். அன்று முதல் ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26ஆம் திகதி தம்முடைய தாய்த்திருநாட்டை காக்க தமது இன்னுயிரை நீத்த தியாகிகளை நினைவுகூரும் வகையில் விடுமுறை அளிக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது.

அதுமட்டுமல்லாமல் ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று சிறந்த சேவை புரிந்தோருக்கும், வீரதீர சாகசம் புரிந்தவர்களுக்கும் விருதுகள், பாராட்டுகள், பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்படுகிறது.

 இந்தியா உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு ஆகும். அதன் பின்னணியில் இலட்சக்கணக்கான போராளிகளின் குருதியும், ஆயிரக்கணக்கான தேசத் தலைவர்களின் தியாகமும் மறைந்திருக்கின்றன.

இந்திய மக்களிடையே ‘ஜெய்ஹிந்த்' என்ற வார்த்தை தேசிய உணர்வை தட்டி எழுப்பியது. சுதந்திர போராட்டத்தின் போது இந்த வார்த்தையை உச்சரிக்கும் போது, மக்களின் சுதந்திர தாகம் அதிகரித்தது. இதனை முதன் முதலில் இந்த தேசத்துக்கு உரக்க கூறியவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ். இவர் 1941- ஆம் ஆண்டு நவம்பர் 2- ஆம் திகதி ஜெர்மனியில் ‘சுதந்திர இந்தியா மையம்' என்ற அமைப்பைத் தொடங்கினார். அதன் தொடக்க விழாவில்தான் நேதாஜி தேசிய உணர்வை தட்டி எழுப்பும் ‘ஜெய்ஹிந்த்‘ (வெல்க இந்தியா) என்ற கோஷத்தை முழங்கினார். அப்போது முதல் இந்தியா மட்டுமல்லாமல் உலக நாடுகளில் வாழும் அனைத்து இந்தியர்களிடமும் இது வாழ்த்தாக ஒலித்தது. 

இந்தியர்களின் தொடர் போராட்டங்களின் விளைவாக இந்தியாவை விட்டு வெளியேற ஆங்கிலேயர்கள் முடிவு செய்தனர். 1947-ம் ஆண்டு ஓகஸ்ட் 15ஆம் திகதி இந்தியா சுதந்திரம் அடைந்தது. அப்போது கிடைத்த சுதந்திரம் முழுமையானது அல்ல. ஏனெனில் சுதந்திரம் பெற்ற போது, பிரிட்டிஷ் அரசு இந்தியாவுக்கு டொமினியன் அந்தஸ்துதான் வழங்கியது. அதன்படி ஆங்கிலேயர் சார்பில் நியமிக்கப்பட்ட கவர்னர் ஜெனரல்தான் நாட்டின் தலைவராக இருந்தார். இதன் பின்னர் இந்திய அரசியலமைப்பு 1949- ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26ஆம் திகதி இந்திய அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக் கொள்ளப்பட்டு 1950- ஆம் ஆண்டு ஜனவரி 26- ஆம் திகதி நடைமுறைக்கு வந்தது. அதுதான் குடியரசு தினம். 

 நாடு விடுதலை பெறுவதற்கு 17ஆண்டுகளுக்கு முன்பே மகாத்மா காந்தி ஏற்படுத்திய விடுதலை நாளான ஜனவரி 26-ஆம் திகதியை  மக்களாட்சி மலர்ந்த நாளாக கொண்டாட சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு தலைமையிலான மந்திரி சபை முடிவு செய்தது. அதன்படி 1950- ஆம் ஆண்டு முதல் குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. 

 தலைநகர் டெல்லியில் இன்று குடியரசு தலைவர் மூவர்ண கொடியை ஏற்றி இந்தியப் படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்வார். பிரதமர் நரேந்திர மோடி இன்றைய நிகழ்வுகளில் பிரதம அதிதியாக பங்கேற்கின்றார். சிறப்பாக பணியாற்றிய வீரர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்படுகின்றன.

மாநிலங்களில், அந்தந்த மாநில கவர்னர் தேசிய கொடியேற்றி காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்வார். பின்னர் வீரதீர செயல்புரிந்த காவலர்களுக்கு பதக்கங்களையும் வழங்குவார். 


Add new comment

Or log in with...