இலங்கை யானைகள் தொடர்பில் அக்கறை வெளியிட்ட டைட்டானிக் நடிகர்

இலங்கையின் கிழக்குப் பகுதியிலுள்ள திறந்தவெளி குப்பைக் கிடங்கில் பிளாஸ்டிக் கழிவுகளால் யானைகள் பாதிக்கப்படுவதை ஹொலிவுட் நட்சத்திரம் லியோனார்டோ டிகாப்ரியோ எடுத்துக்காட்டியுள்ளார்.

ஒஸ்கார் விருது பெற்ற நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோ, அசோசியேட்டட் பிரஸ்ஸின் செய்தி அறிக்கையை ட்வீட் செய்ததன் மூலம் இதனை எடுத்துக்காட்டியுள்ளார். 

 

இலங்கையின் கிழக்குப் பகுதியிலுள்ள, அம்பாறை மாவட்டத்தின் பள்ளக்காடு கிராமத்திலுள்ள குப்பைக் கிடங்கில் பிளாஸ்டிக் குப்பைகளை உட்கொண்டு கடந்த வாரத்தில் இரண்டு யானைகள் இறந்துள்ளன. அதேவேளை இங்கு கடந்த எட்டு ஆண்டுகளில் சுமார் 20 யானைகள் உயிரிழந்துள்ளதாக அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.

இந்த குப்பைக் கிடங்கிலுள்ள பிளாஸ்டிக் கழிவுகளை உட்கொள்வதுவே யானைகளின் இறப்பிற்குக் காரணம் என வனவிலங்கு கால்நடை மருத்துவர் நிஹால் புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.

இறந்த விலங்குகளை பரிசோதித்ததில், குப்பை மேட்டில் உள்ள மக்காத பிளாஸ்டிக்கை அதிக அளவில் விழுங்கியிருப்பது தெரியவந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

யானைகளின் இயற்கையான வாழ்விடத்தின் இழப்புக் காரணமாகவே அவை குப்பைக் கிடங்குகளைத் தேடி வருகின்றன.  அந்த கழிவுகளிலுள்ள, பிளாஸ்டிக் மற்றும் கூர்மையான பொருட்களை உட்கொள்வதால், அவற்றின் செரிமான அமைப்புகளை சேதப்படுகின்றன என அவர் குறிப்பிட்டுள்ளார்.

யானைகள் பிளாஸ்டிக் கழிவுகளை உட்கொள்வதைத் தடுக்க, வனஜீவராசி வலயங்களின் அருகிலுள்ள குப்பைக் கிடங்க்குகளிலுள்ள, குப்பைகளை மீள்சுழற்சி செய்வதாக 2017 ஆம் ஆண்டில் அரசாங்கம் அறிவித்தது. மேலும், விலங்குகள் நடமாட்டத்தை தடுக்கும் வகையில் மின் வேலிகள் அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இரண்டுமே முழுமையாக செயற்படுத்தப்படவில்லை.

நாடு முழுவதுமுள்ள வனஜீவராசி வலயங்களில் 54  குப்பைக் கிடங்குகள் உள்ளன, அவற்றை அண்டிய பகுதியில் சுமார் 300 யானைகள் சுற்றித் திரிகின்றன என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

 


Add new comment

Or log in with...