ரஷ்ய ஆக்கிரமிப்பு அச்சம்
ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு ஒன்று பற்றிய எச்சரிக்கைக்கு மத்தியில் உக்ரைனில் உள்ள பிரிட்டன் தூதரகத்தில் இருக்கும் பணியாளர்களை அந்த நாடு வாபஸ் பெற ஆரம்பித்துள்ளது.
பிரிட்டன் இராஜதந்திரிகளுக்கு குறிப்பிட்டு அச்சுறுத்தல் இல்லை என்று அதிகாரிகள் குறிப்பிட்டபோதும், கீவ் நகரில் இருக்கும் ஊழியர்களின் பாதிப் பேர் பிரிட்டனுக்கு திரும்புவார்கள் என்று தெரிவித்துள்ளனர்.
மறுபுறம் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு எந்த நேரத்திலும் நிகழலாம் என்று குறிப்பிட்டுள்ள அமெரிக்கா, உக்ரைனில் இருக்கும் அதன் தூதரக பணியாளர்களின் உறவினர்கள் அந்த நாட்டை விட்டு வெளியேறும்படி உத்தரவிட்டுள்ளது.
உக்ரைன் மீது இராணுவ நடவடிக்கை எடுக்கும் எந்தத் திட்டமும் இல்லை என்று ரஷ்யா மறுத்துள்ளது.
எனினும் தற்போது நிலவும் பதற்ற சூழல் மற்றும் அமெரிக்க பிரஜைகளுக்கு ஏற்படக்கூடிய தொந்தரவுகள் காரணமாக அமெரிக்க பிரஜைகள் உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு பயணிப்பதை தவிர்க்கும்படி அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
“உக்ரைனுக்கு எதிராக குறிப்பிடத்தக்க இராணுவ நடவடிக்கைக்கு ரஷ்யா திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன” என்று அமெரிக்க இராஜாங்க திணைக்கள அறிவுறுத்தல் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் இந்த நடவடிக்கைகள் முன்னெச்சரிக்கையாக மேற்கொள்ளப்பட்டவையாகவே கருதப்படுகிறது.
அத்தியாவசியம் அற்ற அமெரிக்க தூதரக பணியாளர்களுக்கும் வெளியேற முடியும் என்று அறிவுறுத்தப்பட்டிருப்பதோடு அமெரிக்க பிரஜைகளுக்கும் இவ்வாறான அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
எனினும் இது ஒரு வெளியேற்ற நடவடிக்கை இல்லை என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. ஆனால், ரஷ்ய ஆக்கிரமிப்பு ஒன்று இடம்பெற்றால் அமெரிக்க பிரஜைகளை வெளியேற்றும் நிலை இருக்காது என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
எனினும் ஐரோப்பிய ஒன்றியம் இவ்வாறான நிலைப்பாட்டை எடுக்கவில்லை. தாம் பற்றத்தை மிகைப்படுத்தும் வகையில் செயற்படவில்லை என்று ஐரோப்பிய ஒன்றிய பாதுகாப்பு கொள்கை தலைவர் ஜோசப் பொரெல் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் எல்லைக்கு அருகில் சுமார் 100,000 ரஷ்ய துருப்புகள் குவிக்கப்பட்டிருக்கும் சூழலில் ஐரோப்பாவில் புதிய மோதல் ஒன்று வெடிக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக நோட்டோ இராணுவ பாதுகாப்பு கூட்டணியின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சனிக்கிழமை அமெரிக்காவின் இராணுவ உதவி உக்ரைனை சென்றடைந்தது.
உக்ரைனில் ஆர்ப்பாட்டத்தின் மூலம் ரஷ்ய ஆதரவு ஜனாதிபதி பதவி கவிழ்க்கப்பட்டதை அடுத்து அந்நாட்டின் கிரிமியா பகுதியை கைப்பற்றிய ரஷ்யா 2014 ஆம் ஆண்டு அதனை தனது ஆட்புலத்தில் இணைத்தது.
அது தொடக்கம், ரஷ்ய எல்லைகளுக்கு அருகே கிழக்கு பகுதிகளில் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களுடன் உக்ரைன் போர் ஒன்றை எதிர்கொண்டு வருகிறது.
இந்தப் போரில் டொபாஸ் பிராந்தியத்தில் 14,000 பேர் வரை கொல்லப்பட்டிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
Add new comment