புர்கினா பாசோ ஜனாதிபதி இராணுவத்தினரால் சிறை

புர்கினா பாசோவில் கலகத்தில் ஈடுபட்டிருக்கும் படையினரால் அந்நாட்டு ஜனாதிபதி ரொச் கபோரே தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக தெரியவருகிறது.

இராணுவத் தளபதிகளை நீக்கும்படியும் இஸ்லாமியவாத போராளிகளுக்கு எதிராக போராடுவதற்கு மேலும் வளங்களை தரும்படியும் சில துருப்புகள் கோரி வருகின்றன.

தலைநகர் அவுகடுகுவில் உள்ள ஜனாதிபதி மாளிகை மற்றும் இராணுவ முகாம்களில் கடந்த ஞாயிறு இரவு துப்பாக்கிச் சத்தங்கள் கேட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

எனினும் இராணுவ சதிப்புரட்சி ஒன்று பற்றிய கூற்றை மறுத்திருக்கும் அரசு ஜனாதிபதி சிறைவைக்கப்பட்டதாக வெளியான செய்தியையும் மறுத்துள்ளது. எவ்வாறாயினும் கலகக்கார படையினரால் இராணுவ முகாம் ஒன்றில் ஜனாதிபதி கபோரே தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அரச தொலைக்காட்சி தலைமையகங்களையும் படையினர் சுற்றிவளைத்துள்ளனர்.

அரசு ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தியுள்ள நிலையில் படையினுருக்கு ஆதரவாக நூற்றுக்கணக்கானோர் வீதிகளில் இறங்கியுள்ளனர். சிலர் ஆளும் கட்சி தலைமையகத்தின் மீது தீ வைத்துள்ளனர்.

இராணுவ சதிப்புரட்சி ஒன்றில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 11 வீரர்கள் கைது செய்யப்பட்டு ஒரு வாரத்திலேயே தற்போதைய பதற்றம் ஏற்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...