பரபரப்பான ரி20 போட்டியில் இங்கிலாந்து திரில் வெற்றி

மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான இரண்டாவது ரி-20 போட்டியில், இங்கிலாந்து அணி ஒரு ஓட்டத்தால் திரில் வெற்றிபெற்றது.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரை 1−1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி சமநிலை செய்துள்ளது.

பார்படோஸ் மைதானத்தில் நேற்றுமுன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில், 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 171 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஜேஸன் ரோய் 45 ஓட்டங்களையும் மொயின் அலி 31 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில், ஜேஸன் ஹோல்டர் மற்றும் பெபியன் அலன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் செல்டோன் கொட்ரேல், அகீல் ஹொசைன், கிய்ரன் பொலார்ட் மற்றும் ரொமாறியோ செப்பர்ட் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 172 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணியால், 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 170 ஓட்டங்களை மட்டுமே பெறமுடிந்தது. இதனால், இங்கிலாந்து அணி ஒரு ஓட்டத்தால் திரில் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ரொமாறியோ செப்பர்ட் மற்றும் அகீல் ஹொசைன் ஆகியோர் ஆட்டமிழக்காது 44 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர்.

இங்கிலாந்துக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், மொயின் அலி 3 விக்கெட்டுகளையும் அடில் ராஷிட் 2 விக்கெட்டுகளையும் டொப்லே மற்றும் கிறிஸ் ஜோர்தான் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக 31 ஓட்டங்களையும் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்திய மொயின் அலி தெரிவுசெய்யப்பட்டார்.


Add new comment

Or log in with...