திருடிய மோட்டார் சைக்கிளுடன் சென்று விபத்து; குடும்பஸ்தர் பலி

மோட்டார் சைக்கிளைத் திருடி தப்பிச் சென்ற திருடர்கள்  மோதி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

50 வயதான ராசா ரவிச்சந்திரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சுன்னாகம் சந்தியில் அமைக்கப்பட்டுள்ள வீதி சமிஞ்சை விளக்கு பகுதியில் நேற்று (24) இரவு  இடம்பெற்ற குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

சுன்னாகம் மதுபானசாலைக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனது மோட்டார் சைக்கிளை தென்மராட்சியைச் சேர்ந்த இருவர் திருடி தப்பியோடுவதனை மோட்டார் சைக்கிளின் உரிமையாளர் கண்டுள்ளார்.

அதனையடுத்து, மோட்டார் சைக்கிள் உரிமையாளர் உள்ளிட்டோர் துரத்திச் சென்ற நிலையில் திருடர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் சுன்னாகம் சந்தி வீதி சமிஞ்சை விளக்கு பகுதியில் எதிரே வந்தவரை மோதித்தள்ளியது.

அதில் சம்பவ இடத்திலேயே அதிக குருதிப்போக்கு ஏற்பட்ட நிலையில் அவர் உயிரிழந்தார்.

விபத்தினை ஏற்படுத்திய இருவரும் பிடிக்கப்பட்டு சுன்னாகம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(யாழ்.விசேட நிருபர்)


Add new comment

Or log in with...