தண்ணீரூற்று சந்தை மீது தாக்குதல்; மூவர் கைது

முள்ளியவளை தண்ணீரூற்று பொதுச்சந்தை மீது நேற்று (24) அதிகாலை வேளை நான்கு பேர் கொண்ட கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது.  கரைதுறைப்பற்று பிரதேச சபையின் கீழ் உள்ள முள்ளியவளை உப அலுவலகத்திற்கு சொந்தமான பொது சந்தையே இவ்வாறு சேதப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்போது சந்தையின் காவலாளியான 60 வயதுடைய நபர் காலில் காயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சந்தையினை குத்தகைக்கு எடுத்தமை தொடர்பில் எழுந்த பிரச்சனையின் விளைவாக நள்ளிரவில் வந்த கும்பல் ஒன்று அரச சொத்தான பொது சந்தைக்கு சேதத்தினை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் இரண்டு கடைகளின் கதவுகள் சேதமடைந்துள்ளதுடன் கடைகளின் கட்டடத்தையும், பொருட்களையும் சேதப்படுத்திவிட்டு சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் முள்ளியவளை பொலீஸ் நிலையத்தில் முள்ளியவளை உப பிரதேச சபையின் பொறுப்பதிகாரி முறைப்பாட்டினை பதிவுசெய்துள்ளார்.

இவர்கள் தாக்குதல் நடத்தியமை சி.சி.ரிவி கமராவில் பதிவாகியுள்ள நிலையில் ஆட்களையும் இலகுவாக அடையாளம் காணக்கூடிவாறு இருந்தது.

இந்நிலையில் நேற்று (24) மாலை  இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய மூவரை முல்லைத்தீவு பொலிஸார் கைது செய்துள்ளதோடு அவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

(புதுக்குடியிருப்பு விசேட நிருபர்)


Add new comment

Or log in with...