கிறிஸ்து என்ற உடலின் உறுப்புகளாய் வாழ்வோம்

பொதுக் காலத்தின் மூன்றாம் ஞாயிறான கடந்த ஞாயிறு நாம் வாசிக்கக் கேட்ட இறைவார்த்தை “ஒரே உடலாய் இருப்போம்” என்ற சிந்தனையைத் தருகின்றது.

“சகோதரர் ஒன்றுபட்டு வாழ்வது எத்துணை நன்று. எத்துணை இனியது” (திபா 133:1) என்று கூறுவார் திருப்பாடல் ஆசிரியர்.

இவ்வார்த்தைகள் மனிதர்களாகிய நாம் அனைவரும் ஒன்றுபட்டு வாழ்வதன் முக்கியத்துவத்தையும் அதன் சிறப்பையும் மிகத் தெளிவாக எடுத்துக்கூறுகின்றன. ஆனால், இன்றைக்கு மனிதர்கள் இனத்தின் பெயராலும் மொழியின் பெயராலும் நிறத்தின் பெயராலும் பிளவுபட்டுக் கிடக்கிறார்கள்.

கொரிந்து நகரில் இருந்த மக்கள் தூய ஆவியார் அருளிய அருள்கொடைகளின் அடிப்படையில் பிளவுபட்டுக் கிடந்தார்கள். எவ்வாறெனில், பொதுநன்மைக்காகவே தூய ஆவியார் அருள்கொடைகளைக் கொடுத்திருந்தபோதும் மக்கள் அவற்றைத் தன்னலத்திற்காகப் பயன்படுத்தினார்கள்.

அதைவிடவும் அவர்கள் தங்களுக்குத் தூய ஆவியாரின் அருள்கொடைகள் மிகுதியாகக் கொடுக்கப்பட்டிருக்கின்றன. மற்றவருக்கு அவை குறைவாகக் கொடுக்கப்பட்டிருக்கின்றன என்று தங்களை உயர்வாக நினைத்து மற்றவர்களை இழிவாக நடத்தினார்கள்.

இதனால் பவுல் கொரிந்து நகர மக்களிடம் “நாம் எல்லாரும் ஒரே தூய ஆவியால் ஒரே உடலாய் இருக்கும்படி திருமுழுக்குப் பெற்றோம்” என்கிறார்.

தூய ஆவியால் ஒரு உடலாய் இருக்கத் திருமுழுக்குப் பெற்றோம் எனில் பிரிவினைகள் இருக்கக்கூடாது. உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற ஏற்றத்தாழ்வு இருக்கக்கூடாது. ஒருவேளை யாராவது ஏற்றத்தாழ்வு பார்த்தால் அவர் கிறிஸ்தவராகவே இருக்க முடியாது. காரணம் நாம் அனைவரும் ஒன்றாய் ஒரே உடலாய் இருப்பதையே கடவுள் விரும்புகின்றார்.

எஸ்ரா நூலிலிருந்து எடுக்கப்பட்ட முதல் வாசகம் “ஆண்டவரின் மகிழ்வே உங்களது வலிமை” என்ற வார்த்தைகளுடன் முடிகின்றது: குருவும் திருநூல் வல்லுநருமான எஸ்ரா திருநூலை எல்லோரும் புரிந்துகொள்ளும்படி வாசித்தபோது அவர்கள் அழுது புலம்பினார்கள். அப்பொழுதுதான் அவர் அவர்களைப் பார்த்து, “ஆண்டவரின் மகிழ்வே உங்களது வலிமை” என்கிறார்.

ஆண்டவர் தங்களுக்குக் கொடுத்த கட்டளையைக் கடைப்பிடித்து, அவரோடு ஒன்றித்து வாழவேண்டிய இஸ்ரயேல் மக்கள் ஆண்டவருடைய கட்டளையைக் கடைப்பிடிக்காமல வேற்று தெய்வங்களை வழிபட்ட அவருக்கு வருத்தத்தைத் தந்தார்கள்.

அதனாலேயே அவர்கள் நாடு கடத்தப்பட்டு அன்னிய மண்ணில் அடிமைகளாய் வாழ்ந்தார்கள். இந் நிலையில் பாரசீக மன்னர் சைரஸ் வழியாக யூதா நாட்டினர் அவர்களது சொந்த நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர்.

இவ்வாறு அடிமைத்தன வாழ்விற்குப் பிறகு சொந்த நாட்டிற்குத் திரும்பிய யூதா நாட்டினர் ஆண்டவருடைய கட்டளையைப் கடைப்பிடித்து அவரோடு ஒன்றித்து வாழ அழைக்கப்பட்டார்கள்.

அப்படி வாழ்வதுதான் ஆண்டவருக்கு மகிழ்ச்சியைத் தரும். அதுவே மக்களுக்கு வலிமையாய் இருக்கும் என்கிற பொருளில் குரு எஸ்ரா மக்களைப் பார்த்து “ஆண்டவரின் மகிழ்வே உங்களது வலிமை” என்கிறார். நற்செய்தியில் பெரிய குருவாம் இயேசு “எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக!” (யோவான் 17:21) என்று தந்தையை நோக்கி வேண்டுவதைக்கூட நாம் இந்தப் பின்னணியில் புரிந்து கொள்ளலாம்.

“நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேற்றிற்று” என்று இயேசு சொல்லும் இந்த வார்த்தைகளுடன்தான் நற்செய்தி வாசகம் நிறைவுபெறுகின்றது.

இவ்வார்த்தைகளை இயேசு நாசரேத்தில் உள்ள தொழுகைக்கூடத்திற்கு வந்து எசாயாவின் சுருளேட்டை வாசித்து ஏவளரிடம் கொடுத்த பின் சொன்ன வார்த்தைகள் ஆகும்.

யூதர்களால் ஏழைகள், சிறைப்பட்டோர், பார்வையற்றோர், ஒடுக்கப்பட்டோர், பாவிகள் யாவரையும் சபிக்கப்பட்டவர்களாகவும் ‘தீண்டத்தகாதவர்களாககவும்’ கருதினார்கள்.

இந்தப் பட்டியலில் பிற இனத்தாரையும் நாம் சேர்த்துக்கொள்ளலாம். ஏனெனில் பிற இனத்தாரை அவர்களை தீண்டத்தகாகதவர்களாகவே கருதினார்கள். அப்படியிருக்கையில் ஆண்டவர் இயேசு இவர்களெல்லாம் வாழ்வு பெறுவதற்காகவும் இவர்களையெல்லாம் கடவுளோடு ஒப்புரவாக்கவும் வந்தார்.

இது தொடர்பாக பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்தில் கூறும்போது, “அவரே இரண்டு இனத்தவரையும் பிரித்து நின்ற பகைமை என்ற சுவரை தமது உடலில் ஏற்ற துன்பங்களின் வழியாய்த் தகர்த்தெறிந்து அவர்களை ஒன்றுபடுத்தினார்” (எபேரேயர் 2:14) என்பார்.

இவ்வாறு தமது பணியின் வழியாகவும், பாடுகளின் வழியாகவும் யாவரையும் ஒன்றுபடுத்தி கடவுளோடு ஒப்புரவாக்கப் போகிறார் என்பதை உணர்த்தும் விதமாக இயேசு எசாயாவின் சுருளேட்டை வாசித்துவிட்டு, “நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று” என்கிறார்.

பிரிந்து கிடந்த மக்களை ஒன்றுபடுத்தி அவர்களைத் தமது உடலின் உறுப்புகளாக மாற்றுவதற்காக இயேசு தம்மை அர்ப்பணித்ததால் மறைநூல் வாக்கு நிறைவேறியது எனில் நாம் நம்மிடம் இருக்கின்ற பிரிவினைகளை வேரறுத்து, கிறிஸ்துவின் உறுப்புகளாய் வாழ்கின்றபோது மறைநூல் வாக்கு நிறைவேறும் என்பதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும் இல்லை.

இன்றைக்குப் பலர் கிறிஸ்தவர்களாக இருந்து பிறப்பின் அடிப்படையில் மனிதர்களைப் பிரித்துப் பார்ப்பதும் அவர்களை இழிவாக நடத்துவதற்கும் வேதனையளிப்பதாக இருக்கின்றது. நாம் அனைவரும் கிறிஸ்து என்ற உடலின் உறுப்புகள் என்றால் எப்படி நம்மால் அடுத்தவரை இழிவாக நடத்தத் தோன்றும்? ஆதலால் நாம் அனைவரும் கிறிஸ்து என்ற உடலில் உறுப்புகளாய் வாழ்வோம். ஏனெனில், அப்படி வாழ்கின்றபோதுதான் கடவுள் மகிழ்கின்றார்; அப்பொழுதுதான் மறைநூல் வாக்கு நிறைவேறுகின்றது.

அருட்பணி 
மரிய அந்தோனிராஜ்


Add new comment

Or log in with...