இறை வார்த்தையால் ஈர்க்கப்படுபவர்கள் உயர்ந்த விழுமியங்களுக்காக தம்மை அர்ப்பணிப்பவர்கள்

"ஒருவர் உலகம் முழுவதையும் தமதாக்கிக் கொண்டாலும் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன? (லூக் 9:25)

இறைவார்த்தைகள் இலட்சிய வேட்கை கொண்டவை. அவை தனிமனித விடுதலைக்கும் சமூக விடுதலைக்கும் வழிகாட்டக் கூடியவை. எனவே, இறைவார்த்தையால் ஈர்க்கப்படுபவர்கள் உண்மை, நீதி, நேர்மை, சமத்துவம், சகோதரத்துவம், சமுதாய முன்னேற்றம், பெண்கள் மேம்பாடு ஆகிய உயர்ந்த விழுமியங்களுக்காக உழைக்கவும் உயிரைக்கொடுக்கவும் தயங்கமாட்டர்கள்.

அதனால்தான் புனித பவுலடியார் எபிரேயருக்கு எழுதிய திருமுகத்தில் இறைவார்த்தையின் வல்லமைக் குறித்து இவ்வாறு கூறுகிறார். 

கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது, ஆற்றல் வாய்ந்தது; இருபக்கமும் வெட்டக்கூடிய எந்த வாளினும் கூர்மையானது; ஆன்மாவையும் ஆவியையும் பிரிக்கும் அளவுக்குக் குத்தி ஊடுருவுகிறது; எலும்பு மூட்டையும் மச்சையையும் அவ்வாறே ஊடுருவுகிறது; உள்ளத்தின் சிந்தனைகளையும் நோக்கங்களையும் சீர்தூக்கிப் பார்க்கிறது (எபி 4:12).

புனித சவேரியார் வாழ்வை நாம் நன்கு அறிவோம். பெயரும் புகழும் பெற்று இப்புவியை ஆளவேண்டும் என்று நினைத்தவர். பரிஸ் நகரில் படிக்கின்ற காலத்தில் இவ்வுலகக் காரியங்களில் மூழ்கிப்போய் கிடந்தார்.

புனித இஞ்ஞாசியார் அவரை சந்தித்தபோது புனித லூக்கா நற்செய்தியில் வரும் இறைவார்த்தையான, "ஒருவர் உலகம் முழுவதையும் தமதாக்கிக் கொண்டாலும் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன? (லூக் 9:25) என்பதை திரும்பத் திரும்ப கூறிக்கொண்டே இருந்தார்.

முதலில் இந்த வார்த்தைகளைக் குறித்து புனித சவேரியார் அதிகம் காண்டுகொள்ளாத போதும் சிறிது சிறிதாக இந்த இறைவார்த்தையை அவர் ஆழமாகச் சிந்திக்கத் தொடங்கியபோது அவருக்கு எல்லாம் தெளிவாகியதுநன்மைக்கும் தன்னலத்திலிருந்து பிறர் நலத்திற்கும் இருளிலிருந்து ஒளிக்கும் சாவிலிருந்து வாழ்வுக்கும் அவரால் கடந்து செல்ல முடிந்தது. இந்த இறைவார்த்தைகள் அவர் வாழ்வை மாற்றிய பிறகு, அவர் முழுமையாகக் கடவுள் மையத்திற்குள் வந்தார்.

அவர் தன்னுள் கண்டுகொண்ட கடவுளுக்காக எதையும் செய்யத் துணிந்தார். பல்வேறு நாடுகள், மொழிகள், பண்பாடுகள், கலாச்சாரங்கள் என எல்லைகளைக் கடந்து பணியாற்றினார்.

"என் காலடிக்கு உம் வாக்கே விளக்கு! என் பாதைக்கு ஒளியும் அதுவே! உம் சொற்களைப்பற்றிய விளக்கம் ஒளி தருகின்றது; அது பேதைகளுக்கு நுண்ணறிவு ஊட்டுகிறது. உமது நீதி என்றுமுள நீதி; உமது திருச்சட்டம் என்றும் நம்பத்தக்கது" (திப 129:105,130,142) என்ற திருப்பாடலின் வார்த்தைகள் புனித சவேரியார் வாழ்வில் பொருந்தி நிற்கின்றன“கடவுளே என்னை பயன்படுத்துங்கள், நான் யார் என்பதையும், நான் யாராக இருக்க வேண்டும் என்பதையும், என்னால் என்ன செய்ய முடியும் என்பதையும் எனக்குக் காட்டுங்கள். என்னைவிட உயர்ந்த நோக்கத்திற்காக என்னை பயன்படுத்துங்கள்” என்றார் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர். கடவுளின் சாயலாகப் படைக்கப்பட்டிருக்கும் மனிதரில் எவ்வித வேற்றுமையும் இருக்கக்கூடாது என்பதற்காகத் தன் வாழ்வையே தியாகம் செய்தார்.

இறைவார்த்தையைப் பொருளுணர்ந்து வாசித்தோமென்றால் நிச்சயம் நாம் எவ்வித வேறுபாடுகளுக்கும் இடம் கொடுக்க மாட்டோம் என்பதும் எல்லாரையும் ஒன்றிணைக்கும் ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்க உழைப்போம் என்பதும் திண்ணம்.

உடல் ஒன்றே; உறுப்புகள் பல. உடலின் உறுப்புகள் பலவாயினும் உடல் ஒன்றாயிருப்பதுபோல கிறிஸ்துவும் இருக்கிறார். ஏனெனில், யூதரானாலும் கிரேக்கரானாலும், அடிமைகளானாலும் உரிமைக் குடிமக்களானாலும் நாம் எல்லாரும் ஒரே தூய ஆவியால் ஒரே உடலாய் இருக்கும்படி திருமுழுக்குப் பெற்றோம். அந்த ஒரே ஆவியையே பானமாகவும் பெற்றோம். (1கொரி 12: 12-13)

இறைவார்த்தையை ஏதோ கடமைக்காக வாசிக்காமல் கடமையுணர்வோடு வாசிக்கப் பழகுவோம். புரிந்துகொள்வோம். புதிய சமுதாயம் படைப்போம். அதற்கான அருளை இறைவன் நமக்கு அருளவேண்டும் என்றும் மன்றாடுவோம்.

செல்வராஜ் சூசைமாணிக்கம்


Add new comment

Or log in with...