வடக்கு, கிழக்கில் இராணுவத்தினரின் ஏற்பாட்டில் மாணவர்களுக்கு உதவிகள்

வாழ்க்கையின் இலக்குகளை அடைய ஒவ்வொருவரும் நல்ல கல்வி அறிவு பெற்றிருக்க வேண்டும். கல்வியின் மூலம் இலக்குகளை அடைவதற்கு வறுமை ஒரு தடையாக காணப்படுவதனால் பலரால் தமது திறமைகளை வெளிக்கொணர முடிவதில்லை.

இந்நிலையில், இலங்கை இராணுவமானது பாதுகாப்பு பதவிநிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் எண்ணக்கருவின் கீழ், மாணவர்களை ஊக்குவித்து அவர்களின் திறமைகளை வெளிக்கொணரும் முகமாக, பல்கலைக்கழக மற்றும் பாடசாலை மாணவர்களுக்கான புலமைப்பரிசில் திட்டங்கள் மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு கல்வி சார்ந்த சமூக நலன் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.

பல தசாப்தங்களாக கல்விசார்ந்த பணிகளில் ஈடுபட்டு வரும் இலங்கை இராணுவம், 2009 ஆம் ஆண்டு மனிதாபிமான நடவடிக்கை நிறைவுற்ற பின்னர், நாட்டில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மாணவர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் முகமாக அர்ப்பணிப்பு பணிகளை அதிகரித்துள்ளது. குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள வறிய மாணவர்களின் கற்றல் தேவைகளை நிவர்த்தி செய்து வருகிறது.

அதன்படி, யாழ் உடுப்பிட்டி மகளிர் பாடசாலையில் யாழ் பாதுகாப்புப் படையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது. செல்வபுரம், யோகபுரம் மற்றும் கோப்பாய் பிரதேசங்களில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு 150 சோடி பாடசாலை காலணிகளை படையினர் வழங்கி வைத்தனர். மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்கு உதவிய இலங்கை இராணுவத்தினருக்கு அவர்களது பெற்றோர் நன்றி தெரிவித்தனர்.

வன்னி பிரதேசத்தின் தொலைதூரப் பிரதேசங்களில் உள்ள வறுமையில் வாடும் மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் வகையில், மன்/ இசமலத்ததீவு ஆரம்பப் பாடசாலை, மன்/ தம்பனைக்குளம் ஆரம்பப் பாடசாலை மற்றும் மன்/ பன்னெவெட்டுவான் தமிழ்க் கலவன் பாடசாலை ஆகியவற்றில் தெரிவு செய்யப்பட்ட 54 வறிய மாணவர்களுக்கான பாடசாலை அணிகலன்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு படையினரால் அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டது.

ஒட்டுசுட்டான் கருவள கந்தலில் உள்ள ஆரம்பப் பாடசாலையில் கல்வி கற்கும் வறிய மாணவர்களுக்காக படையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு அப்பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றது.

கிளிநொச்சி வேரவில் வித்தியாலயம் மற்றும் வாழைப்படு றோமன் கத்தோலிக்க கல்லூரியில் கல்வி பயிலும் 200 வறிய பாடசாலை மாணவர்களுக்கான சுமார் 400,000 ரூபா பெறுமதியான புத்தகங்கள் மற்றும் கற்றல் உபகரணங்கள் படையினரால் வழங்கி வைக்கப்பட்டன.

வவுனியா மாவட்டத்தில் உள்ள பாலயஉறுவை ஆரம்பப் பாடசாலையில் கல்வி பயிலும் 12 வறிய மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்களை படையினர் வழங்கி வைத்தனர்.

சுகந்திபுரம் ஆரம்ப பாடசாலையில் கல்வி பயிலும் தேவையுடைய மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு அப்பாடசாலையில் அண்மையில் படையினரால் ஏற்பாடு செய்யப்பட்டது.

வாகரை மகாவித்தியாலயம், உரியங்கட்டு அரச தமிழ்க் கலவன் பாடசாலை, தட்டுமுனை விநாயகர் வித்தியாலயம், கண்டலடி அருந்ததி வித்தியாலயம், பணிச்சந்ரேனி திருமகள் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளைச் சேர்ந்த 100 வறிய மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களை அண்மையில் படையினர் வழங்கி வைத்தனர்.

திருகோணமலை மாவட்டம் ஜயநகர், சாகரபுர ஆரம்பப் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்களை படையினர் நன்கொடையாக அண்மையில் வழங்கினர்.

கரிபட்டமுறிப்பு அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை, சம்மலங்குளம் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை, சின்னத்தம்பி பாடசாலை மற்றும் முல்லைத்தீவு ஈஸ்வரன் பாடசாலை ஆகியவற்றில் கல்வி பயிலும் 330 பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் அண்மையில் படையினரால் வழங்கப்பட்டன.

இவ்வாறு நாட்டின் பல பாகங்களில் இருந்து கல்வி பயிலும் பல வறிய மாணவர்களின் துயரத்தை துடைத்து அவர்களின் சிறந்த எதிர்காலத்திற்கு தற்பொழுது விளக்கேற்றி வைக்கும் இலங்கை இராணுவத்தின் அயரா சேவைகள் தொடர வேண்டுமென பலரும் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.

 எம்.எஸ்.எம் நஜாத்


Add new comment

Or log in with...