தமுகூ தலைவர் மனோ கணேசன் எம்பி
நாம் முன்னோக்கி சென்று, இந்த காட்டாட்சியை வீழ்த்த வேண்டும் என்றால் சஜித் பிரேமதாசவும் சம்பிக்க ரணவக்கவும் முரண்பாடுகளை மறந்து கரங்கோர்க்க வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி விரும்புகிறது என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.
பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் அமைந்துள்ள ஊழல் எதிர்ப்பு குழு அங்கத்தவர்களை விசாரிக்கும் விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவின் நேற்று முன் சாட்சியம் அளித்து விட்டு, ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே மனோ கணேசன் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து அவர்,
வழமையாக அரசாங்கங்கள் பதவிக்கு வரும். பின்னர் அது விழும். அதையடுத்து புதிய அரசாங்கம் பதவிக்கு வரும். அதுவும் விழும். இன்னொரு அரசாங்கம் வரும். இதுவே வழமை. ஆனால், இன்று அரசாங்கம் விழுவதற்கு முன் நாடு விழுந்து விட்டது. அண்டை நாடுகளிடம் கெஞ்சி கூத்தாடி கைமாற்று வாங்கி, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை, பெருங்கடன்களின் மீள் செலுத்தும் தொகையை செலுத்தி காலத்தை ஓட்டும் நிலைமைக்கு நாடு விழுந்து விட்டது.
ஆகவே புதிதாக கட்டி எழுப்ப வேண்டியது புதிய அரசாங்கம் என்பதை விட, புதிய நாடு என்றுதான் சொல்ல வேண்டும். ஆகவே இன்று இந்நாட்டின் அரச எதிர்ப்பு சக்திகள் அனைத்தும் கரங்கோர்க்க வேண்டும். அதற்கு முன் ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாசவும், 43ம் படையணி தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவும் கரங்கோர்க்க வேண்டும்.
நான் மனோ கணேசன். தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவன். எங்கள் கூட்டணி, எவருக்கும் எடுபிடி வேலை செய்யாத, ஒரு பலமான, தைரியமுள்ள சுதந்திரமான கட்சி. இது மக்களின் கட்சி. எம்மை எவரும் பயமுறுத்த முடியாது. நாங்கள் பயந்து ஒதுங்க மாட்டோம். அதை இன்னமும் பலமாக நாம் வளர்ப்போம். அது ஒன்றே எமது பலம் என்றார்.
Add new comment