தமிழக மீனவர்களின் படகுகளை ஏல விற்பனை செய்யும் தீர்மானத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்

கடற்றொழில் அமைச்சிடம் செந்தில் தொண்டமான் கோரிக்கை

எல்லைதாண்டி மீன்பிடியில் ஈடுப்பட்ட குற்றச்சாட்டில் இலங்கை கடற்படையினரால்  பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை எதிர்வரும் 7ம் திகதி ஏல விற்பனைக்கு விடப்படுவதாக கடற்றொழில் அமைச்சு அறிவித்துள்ள நிலையில்  இதனை மனிதாபிமான அடிப்படையில் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என இ.தொ.காவின் உப தலைவர் செந்தில் தொண்டமான் கடற்றொழில் அமைச்சிடம் விசேட கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார்.

அவர் விடுத்துள்ள  விசேட அறிக்கையில் மேலும் வலியுறுத்தியுள்ளதாவது,

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் குறைந்த அளவு கடற்பரப்பு இருப்பதனால் தமிழக மீனவர்கள் எல்லைத் தாண்டுவது  முற்றிலும் அறியா செயலாகும்.  அவர்கள் மீன்பிடிக்கும் நோக்கத்தில் மட்டுமே கடற்பரப்புக்குள் வருகின்றனர். தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் அவர்கள்  எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை. எனவே  மனிதாபிமான அடிப்படையில் இந்த விடயத்தை கடற்றொழில் அமைச்சு மறுப்பரிசீலனை செய்ய வேண்டும்.

இந்த படகுகளை மீண்டும் அவர்களிடம் ஒப்படைக்கும் சந்தர்ப்பத்தில் இரு நாட்டின் மீனவ சமூகத்தினருக்கும் இடையில் நட்புறவு வலுப்படும்.

மீனவர்களின் பிரச்சினைக்கு  இரு நாடுகளும் பேச்சுவார்த்தையின் ஊடாகவே சுமூகமான தீர்வினை எட்ட முடியும். மீனவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டதால், மீனவர்கள் படகின்றி தொழிலுக்கு செல்ல முடியாமல் பாரிய பொருளாதார சிக்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை ஏலத்தில் விடும் பொழுது  மீனவ சமூகத்தினர் மேலும்  வாழ்வாதார நெருக்கடிக்குள் தள்ளப்படக்கூடிய சூழல் ஏற்படுகிறது. பொருளாதார ரீதியாக முன்னேறி வரும் மீனவ சமூகத்திற்கு இந்நடவடிக்கை ஒரு முட்டுக்கட்டையாக அமையும்.

எனவே இவ்விடயத்தை மறுப்பரிசீலனை செய்ய வேண்டும் என கடற்றொழில் அமைச்சிக்கு செந்தில்  தொண்டமான் கோரிக்கை விடுத்துள்ளார்.


Add new comment

Or log in with...