இறால் பண்ணை நீர்த்தொட்டிக்குள் விழுந்து குடும்பஸ்தர் பலி

புத்தளம் - ஆராச்சிக்கட்டுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆனைவிழுந்தான் பகுதியிலுள்ள இறால் பண்ணை நீர் தொட்டிக்குள் விழுந்து குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முந்தல் பத்துளுஓயா - மகாமாலிய பகுதியைச் சேரந்த 51 வயதுடைய இரண்டுப் பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்த குறித்த நபர் நேற்று (24) காலை இறால் பண்ணையில் இறால்களுக்கு காலை நேர உணவை வீசிக்  கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் குறித்த நபர் இறால் பண்ணை நீர்த் தொட்டிக்குள் வீழ்ந்து கிடப்பதை அவதானித்த இறால் பண்ணையின்   உரிமையாளர்  இது தொடர்பாக ஆராச்சிகட்டுவ பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

குறித்த தகவலின் அடிப்படையில் அங்கு வருகை தந்த பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

அத்துடன்,  அங்கு வருகை தந்த ஆராச்சிக்கட்டுவ  பிரதேச திடீர் மரண விசாரனை அதிகாரி சம்பவ இடத்தில் மரண விசாரனையை மேற்கொண்ட பின்னர், சடலத்தை பிரேத பரிசோதனைக்காக சிலாபம் பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு உத்தரவிட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை ஆராச்சிக்கட்டுவ  பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(கற்பிட்டி தினகரன் விஷேட நிருபர்)


Add new comment

Or log in with...