மின் உற்பத்தி நடவடிக்கைகளுக்கு தேவையான எரிபொருளுக்காக மத்திய வங்கி மூலம் நிதியை பெற்றுக்கொள்ள நடவடிக்கை

ஜனாதிபதி பணிப்புரை வழங்கியுள்ளதாக அமைச்சர் காமினி லொக்குகே தெரிவிப்பு

மின் உற்பத்தி நடவடிக்கைகளுக்கு தேவையான எரிபொருளை கொள்வனவு செய்வதற்கான நிதியை மத்திய வங்கியிடமிருந்து பெற்றுக் கொள்ளவுள்ளதாக மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தமக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர்,   மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுடன் பேச்சுவார்த்தை நடத்தி தேவையான நிதியைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அமைச்சர் காமினி லொக்குகே: தனியார் மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து மின்சாரத்தை பெற்றுக் கொள்வதை மட்டுப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதனால் நாம் இம்முறை தனியார் மின் உற்பத்தி நிலையங்களோடு மேற்கொண்டிருந்த ஒப்பந்தங்களை நீடிக்கவில்லை.

தனியார் மின் உற்பத்தி நிறுவனங்கள் 3வருட காலத்திற்கு ஒப்பந்தங்களை கோருகின்றனர். எனினும் எமக்கு மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு மாத்திரமே ஒப்பந்தங்களை மேற்கொள்ள வேண்டிய தேவை உள்ளது. எனினும் தனியார் துறையினரிடமிருந்து மின்சாரத்தை பெற்றுக் கொள்வதில் சில தரப்பினர் பெரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கொழும்பு துறைமுகத்தில் மிதக்கும் மின் உற்பத்தி நிலையத்திற்கான எரிபொருள் நேற்றைய தினம் பிற்பகல் 3மணி வரைக்குமே  போதுமானதாக இருந்தது.

அத்துடன் சப்புகஸ்கந்த மின்னுற்பத்தி நிலையத்தின்  நடவடிக்கைகள் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு இரண்டு மின் உற்பத்தி நிலையங்கள் செயல்படாத நிலையில் தேசிய மின் விநியோக தொகுதிக்கான 168மெகாவாட் மின்சாரம் இழக்கப்பட்டுள்ளது .

அத்துடன் நாட்டில் நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக நீர் மின்  உற்பத்தி நிலையங்களின் நடவடிக்கைகளும் மட்டுப்படுத்தப்பட்ட நிலையிலேயே காணப்படுகின்றன என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்


Add new comment

Or log in with...