எரிபொருள் உபயோகத்தை கட்டுப்படுத்த அமைச்சரவைக்கு முக்கிய யோசனைகள்

அமைச்சர் உதய கம்மன்பில சமர்ப்பிப்பு

நாட்டில் நிலவும் பாரிய எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வாக எரிபொருள் உபயோகத்தை குறைப்பது தொடர்பில் பின்பற்ற வேண்டிய அவசர யோசனைகள் சிலவற்றை பெற்றோலிய வளத்துறை அமைச்சர் உதய கம்மன்பில அமைச்சரவைக்கு சமர்ப்பித்துள்ளார்.

அதற்கிணங்க பாடசாலைகளை வாரத்திற்கு ஒருநாள் வீடியோ தொழில்நுட்பம் மூலம் நடத்துவது, வாகன நெரிசலை குறைப்பதற்காக அலுவலகங்கள் திறக்கும் நேரத்தில் மாற்றங்களைக் கொண்டு வருவது உள்ளிட்ட பல்வேறு யோசனைகளை அவர் அமைச்சரவைக்கு சமர்ப்பித்துள்ளார்.

அத்துடன் எரிபொருளுக்கான விலை சூத்திரத்தை உடனடியாக நடைமுறைப் படுத்துவதற்கும் கொழும்புக்கு வரும் வாகனங்களை கட்டுப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்குமாறும் அவர் யோசனைகளை முன் வைத்துள்ளார்.

அத்துடன் அரச நிறுவனங்களில் கூட்டங்கள், கருத்தரங்குகள் மற்றும்பேச்சுவார்த்தைகள் ஆகியவற்றுக்கு அதிகாரிகளை அழைப்பதை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளை கொழும்புக்கு அழைப்பதை மட்டுப்படுத்துமாறும் அத்தகைய கூட்டங்களை வீடியோ தொழில்நுட்பம் மூலம் மேற்கொள்வதற்கு அரச நிறுவனங்களுக்கு பணிப்புரை விடுக்குமாறும் அவர் அந்த யோசனைகள் மூலம் கேட்டுக் கொண்டுள்ளார்.

அத்துடன் வாகன நெரிசலை கட்டுப்படுத்துவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கைத் தொழிற்சாலைகளுக்கு தேவையான மின்சாரத்தை மீள் புத்தாக்க மின்சார உற்பத்தி மூலம் பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

அதேவேளை வர்த்தக வங்கிகளுக்கு கிடைக்கும் வெளி நாட்டு நிதியில் மூன்றில் ஒரு பகுதியை மத்திய வங்கி பெற்றுக்கொண்டு மருந்து, மருத்துவ உபகரணங்கள் மற்றும் எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக அந்த நிதியை அரச நிறுவனங்களுக்கு பெற்றுக் கொடுக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

எரிபொருள் உபயோகத்தை குறைப்பதற்காக எரிபொருள் விலையை அதிகரித்திருந்தாலும் எரிபொருளுக்கான கேள்வி தொடர்ந்தும் அதிகரித்து செல்வதாக தெரிவித்துள்ள அமைச்சர்,சுற்றுலாப் பயணங்கள் உறவினர்கள் வீடுகளுக்குச் செல்தல், விருந்து உபசாரங்களை மேற்கொள்வதற்காக பயணங்களை முன்னெடுத்தல் ஆகியன எரிபொருள் உபயோகம் அதிகரிப்பதற்கு காரணமாக அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் பொது வாகனங்களை தவிர்த்து தனியார் வாகனங்களை அதிகமாக உபயோகிப்பது,சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக மண்ணெண்ணெய் அடுப்பு பாவிக்கும் நடைமுறை அதிகரித்துள்ளதாலும் எரிபொருள் பாவனை அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை உலக சந்தையில் எரிபொருள் விலை தற்போது அதிகரித்துள்ள நிலையில் கடந்த மார்ச் மாதம் 74 தொடராக இருந்த ஒரு பேரல் மசகு எண்ணெய் தற்போது 86 ஆக அதிகரித்துள்ளதாக உள்ளன தெரிவித்துள்ள அமைச்சர் எரிபொருள் கொள்வதற்காக மாதாந்தம் 400 மில்லியன் டொலர்களை செலவிட வேண்டி உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்


Add new comment

Or log in with...