கொவிட் தொற்றை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதில் அவதானம் தேவை

உலகின் பல நாடுகளிலும் வேகமாகப் பரவி வரும் கொவிட் 19 தொற்றின் பிறழ்வான ஒமிக்ரோன் இலங்கையிலும் பரவும் நிலையை அடைந்திருப்பதாக சுகாதாரத் துறையினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கடந்த சில தினங்களாக கொவிட் 19 தொற்றாளர்களாக அடையாளம் காணப்படுபவர்களின் எண்ணிக்கையில் 30 வீத அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்திருக்கின்றார்.

இத்தொற்றுக்கு உள்ளானவர்களாக அடையாளம் காணப்படும் குழந்தைகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் நோயியல் நிபுணர் தீபால் பெரேரா, தற்போது 42 குழந்தைகள் இத்தொற்றுடன் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறியுள்ளார்.

இவ்வாறான சூழலில் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூற்று மருத்துவ பீடம், இலங்கையில் தற்போது ஒமிக்ரோனின் மூன்று உபபிரிவுகள் பரவி வருவதாகக் குறிப்பிட்டுள்ளது. கொவிட் 19 தொற்று தொடர்பில் கடந்த வாரம் 78 மாதிரிகளைப் பரீட்சித்த போது அவற்றில் 75 மாதிரிகளில் ஒமிக்ரோன் பிறழ்வுகள் காணப்பட்டன என்று தெரிவித்திருக்கும் பேராசிரியர் சந்திம ஜீவேந்திர, இவற்றில் பி.ஏ. 1, பி.ஏ. 2, பி.1.1.529 ஆகிய மூன்று ஒமிக்ரோன் உப பிரிவுகள் அவதானிக்கப்பட்டுள்ளன' என்று தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாவட்டத்தின் பல பிரதேசங்களில் இருந்து கிடைக்கப் பெற்றுள்ள மாதிரிகளில் ஒமிக்ரோனின் இந்த உபபிரிவுகள் அவதானிக்கப்பட்டுள்ளதோடு காலி, பதுளை, ருவென்வெல்ல ஆகிய பிரதேசங்களில் இருந்து கிடைத்துள்ள மாதிரிகளிலும் ஒழிக்ரோன் பிறழ்வு காணப்பட்டுள்ளது. ஒமிக்ரோன் பரவுதல் தொடர்பில் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் இவ்வாறு தெரிவித்திருக்கும் நிலையில், கொவிட் 19 தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை பத்து வீதத்தினால் அதிகரித்துள்ளதாகவும், ஒட்சிசன் சிகிச்சை தேவைப்படும் நோயாளர்களின் எண்ணிக்கை எட்டு வீதத்தினால் உயர்ந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சின் மருத்துவ தொழில்நுட்ப பிரிவின் பணிப்பாளர் டொக்டர் அன்வர் ஹம்தானி தெரிவித்திருக்கின்றார். அகில இலங்கை தாதியர் சங்கமும் நாட்டில் கொவிட 19 தொற்று வேகமாகப் பரவதாக குறிப்பிட்டிருக்கின்றது.

நாட்டில் கொவிட் 19 தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை மீணடும் அதிகரித்து வருவதையே இந்தத் தரவுகள் வெளிப்படுத்தி நிற்கின்றன. ஏற்கனவே நாட்டில் தோற்றம் பெற்றிருந்த கொவிட் 19 தொற்றின் மூன்றாவது அலை கடும் அர்ப்பணிப்புகளுக்கு மத்தியில் பெருவீழ்ச்சி நிலைக்கு கொண்டு வரப்பட்டு நாட்டில் இயல்பு நிலையும் ஏற்படுத்தப்பட்டது. ஆனால் இத்தொற்று இவ்வாறு பெருவீழ்ச்சிக்கு கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து இத்தொற்று தவிர்ப்புக்கான அடிப்படை சுகாதார வழிகாட்டல்கள் தொடர்பில் மக்கள் மத்தியில் கவனயீனமும் அசிரத்தையும் அதிகரித்தன. இந்நிலைமையானது மீண்டும் தலைதூக்குவதற்கான வாய்ப்பை எதிர்பார்த்திருந்த கொவிட் 19 தொற்றுக்கு சாதகமாகியுள்ளது. இந்நிலையில்தான் இத்தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கையில் தற்போது அதிகரிப்பு ஏற்பட்டிருக்கின்றது என்பதில் ஐயமில்லை.

கொவிட் 19 தொற்றும் அதனை அடிப்படையாகக் கொண்ட பிறழ்வுகளும் ஆளுக்காள் தொற்றி பரவக் கூடியவையாகும். இவற்றைத் தொடர்ந்தும் பெருவீழ்ச்சி நிலையில் வைத்திருப்பதற்கு இப்போதைக்கு அடிப்படை சுகாதார வழிகாட்டல்களை முழுயாகக் கடைப்பிடித்தாக வேண்டும். இத்தொற்றின் தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான தடுப்பூசி பெற்று இருந்தாலும் அதற்கு உள்ளாவதையும் அதன் பரவுதலையும் தவிர்க்க முடியாது. அதனால் இத்தொற்றைத் தவிர்த்துக் கொள்வதற்காக இப்போதைக்கு கைகளைக் கழுவுவதையும், முகக்கவசம் அணிவதையும் சமூக இடைவெளியைப் பேணுவதையும் முறையாகவும் தொடராகவும் கடைப்பிடிக்க வேண்டும். அதுவே மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதாரத்துறையினரின் கருத்தாகும்.

இந்நிலையில்தான் கொவிட் 19 தொற்று தவிர்ப்புக்கான அடிப்படை சுகாதார வழிகாட்டல்களைத் தொடர்ந்தும் கடைப்பிடித்தொழுகுமாறு வலியுறுத்தப்படுகின்றது. அந்த வகையில் ஆரம்ப சுகாதார சேவைகள் மற்றும் கொவிட் 19 தொற்று கட்டுப்பாட்டுக்கான இராஜாங்க அமைச்சர் டொக்டர் சுதர்ஷணி பெர்னாண்டோ புள்ளே, 'நாட்டில் கொவிட் 19 தொற்று பரவுதல் அதிகரித்து வரும் சூழலில் அடிப்படை சுகாதார வழிகாட்டல்களை மக்கள் ஒழுங்குமுறையாகக் கடைப்பிடித்து மிகவும் அவதானமாகச் செயற்பட வேண்டும்' என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆகவே கொவிட் 19 தொற்று தவிர்ப்புக்கான அடிப்படை சுகாதார வழிகாட்டல்களை முறையாகவும் தொடராகவும் ஒவ்வொருவரும் கடைப்பிடிக்க வேண்டும். அதனைத் தம் பொறுப்பாகக் கருத தவறக் கூடாது. அப்போதுதான் இத்தொற்றைத் தொடர்ந்தும் பெருவீழச்சி நிலையில் வைத்திருக்க முடியும். அதுவே இன்றைய தேவையாகும்.


Add new comment

Or log in with...