தமிழகத்திலிருந்து தாயகம் திரும்ப விரும்புகின்ற அகதிகள் உரியபடி மீள்குடியேற்றப்பட வேண்டும்

தமிழக முகாம்களில் வசித்து வரும் இலங்கை அகதிகள் தாயகம் திரும்புவதற்கான வாய்ப்புகள் உருவாகி உள்ளது என்று கூறப்படுகின்ற போதிலும், அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படவில்லையென அகதிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் (கஸ்தம்பாடி, திருவண்ணாமலை மாவட்டம்) வசிக்கும் டேவிட் அனோஜன் என்பவர் தனது குழுவுடன், இலங்கை அகதிகள் தொடர்பாக தமிழகத்தின் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சரான செஞ்சி மஸ்தானை சந்தித்துப் பேசியுள்ளார்.

இக்குழுவினர் மகஜர் ஒன்றையும் கையளித்துள்ளனர். அந்த மகஜரில் தெரிவித்திருப்பதாவது:

இலங்கையில் அரசியல் மாற்றம் ஏற்பட்டபின்பு சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் பன்னாட்டு தூதரகங்கள் மூலம் தமிழக முகாம்களில் வசித்து வரும் மக்கள் நாடு திரும்புவதற்கான பொன்னான வாய்ப்புகள் உருவாகி உள்ளது என்று கூறப்பட்டு நாடு திரும்புவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. இது தொடர்பாக நாடு திரும்ப விருப்பம் உள்ளவர்கள் பற்றிய கருத்து கணிப்புகள் நடத்தப்பட்டு அவை இந்திய மற்றும் இலங்கை அரசுகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.

தொண்டு நிறுவனங்கள் கூறிய நம்பிக்கையான வார்த்தைகளை நம்பிய இலங்கை அகதிகள் ஏமாற்றமடைந்துள்ளனர். தங்கள் சொந்த விருப்பத்தில் நாடு திரும்ப விருப்பம் உள்ளவர்கள் என்று சுமார் 4000 நபர்களின் விபரங்கள் ஏற்கனவே இந்திய மற்றும் இலங்கை அரசுகளுக்கு சம்பந்தப்பட்ட தொண்டு நிறுவனத்தின் மூலம் கையளிக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் கடந்த சில ஆண்டுகளாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.ஆனால் அந்த முயற்சி தாமதமாகிக்கொண்டே செல்கிறது.

தங்கள் சொந்த விருப்பத்தில் நாடு திரும்ப விரும்புபவர்களை அங்கு அழைத்துச் செல்லும் செயல்பாடுகள் மீண்டும் முன்னெடுக்கப்படும் போது அகதிகளுக்கு உத்தரவாதமான வாழ்கையை அங்கு ஏற்படுத்திக் கொடுப்பது அவசியம்.

சிறுபான்மையினர் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சராக தாங்கள் பொறுப்பேற்ற பின்பு மேற்கொள்ளப்பட்ட இலங்கைத் தமிழர் முகாம்களின் ஆய்வுகளுக்கு பின்னர் நடைபெற்ற ஒரு செய்தியாளர் சந்திப்பில் 'அகதிகள் முகாமில் உள்ள இலங்கை தமிழர்கள் யாரையும் கட்டாயப்படுத்தி இலங்கை அனுப்ப மாட்டோம், அவர்களின் ஒப்புதல்படியே செயல்படுவோம், அவர்களுக்கு என்றும் பாதுகாப்புடன் நாங்கள் இருப்போம்' என்று தாங்கள் கூறிய வார்த்தைகள் மீது நாங்கள் கொண்டுள்ள அளவற்ற நம்பிக்கையின் அடிப்படையில் மேற்கண்ட கோரிக்கைகளை பரிசீலித்து தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோருகின்றோம்.

வாஸ் கூஞ்ஞ
தலைமன்னார் விஷேட நிருபர்


Add new comment

Or log in with...