வெளிநாட்டு பண அனுப்பல்களுக்கான ஊக்குவிப்பு ஏப்ரல் வரை நீடிப்பு

பொருளாதார உறுதிப்பாட்டை வலுப்படுத்த மத்திய வங்கியினால் பல்வேறு தீர்மானங்கள்

- பெப்ரவரி 01 முதல் ஒவ்வொரு பண அனுப்பலுக்கும் ரூ. 1,000 கொடுப்பனவு
- கொள்கை வட்டி வீதங்களில் 0.5 வீதம் அதிகரிப்பு
- வெளிநாட்டிலுள்ளவர்களுக்கு வழங்கும் சேவைகளுக்கு டொலர்களில் மாத்திரம் சேவை

நாட்டின் பொருளாதார உறுதிப்பாட்டை வலுப்படுத்த மத்திய வங்கியின் நாணயச் சபையினால் பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக, இன்றையதினம் (20) மத்திய வங்கியில் இடம்பெற்ற நாணயக்கொள்கை மீளாய்வு தொடர்பான, இவ்வருடத்தின் முதலாவது ஊடகவியலாளர் மாநாட்டில் அறிவிக்கப்பட்டது.

அதற்கமைய, நேற்றையதினம் (19) இடம்பெற்ற நாணயச்சபை கூட்டத்தில் பின்வரும் முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக, இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

  • நிலையான வைப்பு வசதி வீதம் (SDFR) 5.00% இலிருந்து 5.50% ஆகவும், நிலையான கடன் வசதி வீதம் (SLFR) 6.00% இலிருந்து 6.50% ஆகவும் அதிகரிப்பு
  • இறக்குமதி செய்யப்படும் எரிபொருள் கொள்வனவுகளுக்காக, அத்தியாவசிய இறக்குமதிப் பட்டியல்களின் நிதியிடலை, அனுமதிப்பத்திரம் பெற்ற வங்கிகளின் வெளிநாட்டுச் செலாவணி உட்பாய்ச்சல்களுக்கு விகிதசமமாக அவ்வங்கிகளுக்கிடையில் பகிர்ந்தளித்தல்.
  • பதிவு செய்யப்பட்ட அனைத்து சுற்றுலா சேவை நிறுவனங்களும், இலங்கைக்கு வெளியில் வதியும் நபர்களுக்கு வழங்கும் சேவைகளுக்கு வெளிநாட்டுச் செலாவணியில் மாத்திரம் அறவிட கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
  • வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்பும் புலம்பெயர் தொழிலாளர்களின் பண அனுப்பல்களுக்கு, ஒரு டொலருக்காக வழங்கப்படும் ரூ. 2.00 ஊக்குவிப்பு கொடுப்பனவுக்கு மேலதிகமாக வழங்கப்படும் ரூ. 8.00 (மொத்தம் ரூ. 10) கொடுப்பனவை ஏப்ரல் 30 வரை நீடிப்பு
  • முறையான வழிகளின் ஊடாக ரூபா கணக்குகளுக்கு பணம் அனுப்பும் போதான ஒவ்வொரு பரிமாற்றத்திற்கும் ரூ. 1,000 கொடுப்பனவை வழங்குவதன் மூலம், பணப்பரிமாற்றல் செலவை மீளளித்தல்.
  • புலம்பெயர் தொழிலாளர்களின் வெளிநாட்டு நாணய வைப்புகள் மற்றும் ரூபா வைப்புகளுக்கு உயர் வட்டி வீதங்களை அறிமுகப்படுத்தல்

இது தொடர்பில் இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள முழுமையான அறிக்கை வருமாறு...

PDF File: 

Add new comment

Or log in with...