யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களிடம் அரசாங்க தலைவர்கள் மன்னிப்பு கோரி இருந்தால் பாதி பிரச்சினை தீர்ந்திருக்கும்

மொழிப்பிரச்சினைக்கு அரச மட்டத்தில் இருந்து கண்டிப்பான உத்தரவுகள் வழங்கப்பட வேண்டும். இந்த மொழிப்பிரச்சினைகள் இன்று மட்டுமல்ல ஜி.ஜி.பொன்னம்பலம் காலம் தொட்டு சம்பந்தன் வரையிலான காலத்திலிருந்து வருகின்றது என சிவில் அதிகாரியாகவும் - யுத்தம் முடிவடைந்த காலகட்டத்தில் மீள் புனர்வாழ்வு மற்றும் அத்தியாவசிய சேவை ஆணையாளராகவும், முன்னாள் ஜனாதிபதியின் வடகிழக்கு மீள் புனர்வாழ்வு புனரமைப்பு விசேட செயல் அணியின் செயலாளராக சேவைசெய்த எஸ்.பி .திவாரத்தின தெரிவித்தார்.

ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட மனித உரிமை மற்றும் முன்னைய அறிக்கைகளை கேட்டறியும் ஆணைக்குழுவில் மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார். இந் நிகழ்வு உயர் நீதிமன்ற நீதியரசரும் ஆணைக்குழுவின் தலைவருமான  துலிப் நவாஸ் தலைமையில் நடைபெற்றது.  

இங்கு கருத்துத் தெரிவித்த அவர், இம்ரான் கானைப் போன்று எமது நாட்டின் அரச தலைவர்கள் நம் நாட்டில் கடந்த காலங்களில் நடைபெற்ற யுத்தத்தின் போது பாதிக்கப்பட்ட தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களிடம் அடி மட்டத்துக்கு இறங்கி ஒரு பகிரங்கமாக தேசிய ரீதியில் மன்னிப்புக் கோரினாலேயே எமது நாட்டின் அரைவாசிப் பிரச்சினைகள் தீர்ந்துவிடும். 

இலங்கை பொறியியலாளர்  ஒருவர் அண்மையில் பாகிஸ்தானில் வைத்து மத தீவிர போக்குடையவர்களால் கொலைசெய்யப்பட்டார். அவ் விடயத்தினை எவ்வாறு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கையாண்டார். அவர் எடுத்த நடவடிக்கைகளை முழு உலகமும் அதனை கூர்ந்து அவதானித்தது. அவர் உடனடியாகச் செயல்பட்டு எடுத்த நடவடிக்கைகள் மிகவும் சிறப்பானதொரு நடவடிக்கையாகும். அவரின் சீரான தலைமைத்துவத்தை இது காட்டுகிறது. அவர் அடிமட்டத்திற்கே இறங்கிச் சென்று விரைவாக செயல்பட்டார். அவர்  பகிரங்கமாகவே இலங்கை மக்களிடம் மன்னிப்பும் கோரியிருந்தார். அதி கூடிய நிவாரணமும் வழங்கினார், சம்பந்தப்பட்டவர்களை உடன் கைது செய்து சட்டத்தின்  முன் நிறுத்தினார். இவ்வாறு எமது நாட்டின் அரச தலைவர்கள் நம் நாட்டில் கடந்த காலங்களில் நடைபெற்ற யுத்தத்தின் போது பாதிக்கப்பட்ட தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களிடம் அடி மட்டத்துக்கு இறங்கி ஒரு பகிரங்கமாக தேசிய ரீதியில் மன்னிப்புக் கோரினாலேயே எமது நாட்டின் அரைவாசிப் பிரச்சினைகள் தீர்ந்துவிடும். அதன் பிறகு பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்கள் நஷ்டஈடுகள் வழங்கப்படல் வேண்டும். இதுவே தேசிய நல்லிணக்கமாகும். 

அவர்  அங்கு தொடர்ந்து சாட்சியமளிக்கையில்,  -  இன்றும் மொழிப்பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை.  இன்றும் தெற்கில் உள்ள அரச அதிகாரிகள் தனிச் சிங்களத்திலேயே வடக்கு கிழக்கு வாழ் மக்களுக்கு அலுவல்கள் கடிதங்களை அனுப்புகின்றார்கள்.  இம் மொழிப்பிரச்சினைக்கு அரச மட்டத்தில் இருந்து கண்டிப்பான உத்தரவுகள் வழங்கப்பட வேண்டும். இந்த மொழிப்பிரச்சினைகள் இன்று மட்டுமல்ல ஜி.ஜி.பொன்னம்பலம் காலம் தொட்டு சம்பந்தன் வரையிலான காலத்திலிருந்து வருகின்றது. 

2006-/2009 வரை காலப்பகுதியில் நான் அத்தியாவசிய சேவைகள் ஆணையளராக கடமையாற்றினேன். அதன் பின்னர்  யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் 2015ல் வடக்கின் புனர் வாழ்வு நடவடிக்கை மீளக் குடியமர்த்துதல், கன்னிவெடிகளை இராணுவத்தாருடன் இணைந்து அகற்றி அப்பிரதேசங்களில் வாழ்ந்த மக்களுக்கு சகல அடிப்படை வசதிகளையும் வழங்கி மீளக்குடியமர்த்தினோம், பாடசாலைகள், பாதைகள், குடிநீர், மின்சாரம்  போன்ற அபிவிருத்திகளையும் துரித மீள் அபிவிருத்தியின் கீழ் செயல்படுத்தினோம். அங்கு வாழ்ந்த மூவினங்களுக்கும் காணிப்பிரச்சினைகள் இருந்தன. யுத்த காலத்தில் மன்னார்,  யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த முஸ்லிம்கள் தமது காணிகளை அடையாளம் காண்பதற்காக பெரிதும் கஷ்டப்பட்டார்கள். அவர்கள் புத்தளத்தில் இடம்பெயர்ந்து முசலி, மாந்தை போன்ற பிரதேசங்களில் மீளக்குடியமர்வதற்கு முயற்சித்தார்கள்.

(அஷ்ரப் ஏ சமத்) 


Add new comment

Or log in with...