கௌரவமான வாழ்க்கையை பாதுகாக்க சரியான பிரதிநிதிகளை தெரிவு செய்யுங்கள்

யுத்தம் முடிவிற்கு வந்த பின்னர் எங்கள் கௌரவத்தில் எதுவித மாசும் ஏற்படவில்லை. இன்று இருக்கின்ற கௌரவமான நிலைமையை பாதுகாத்து முன்னோக்கி செல்ல, சரியான பிரதிநிதிகளை அடையாம் கண்டு மக்கள் தெரிவுசெய்ய வேண்டும் என கடற்தொழில், நீரியல்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் மாமடுச்சந்தி வெள்ளைப்பிள்ளையார் ஆலயத்தின் அறநெறி பாடசாலையின் ஆண்டு நிகழ்வில் கலந்துகொண்டு (15) உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்த அவர், மேலும் தெரிவிக்கையில்,

எங்களுக்கு ஒரு காலகட்டத்தில் ஆயுத போராட்டத்திற்குரிய தேவை ஏற்பட்டிருந்தது உண்மைதான். ஆனால் இலங்கை இந்திய ஒப்பந்தத்துடன் 1987ஆம் ஆண்டுடன் நாங்கள் அதற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கவேண்டும்.

சிறுபிள்ளை வேளாண்மை வீடுவந்து சேராது என்பது போல தங்கள் சுயலாபத்திற்காக மக்களை தவறாக வழிநடத்தி அவர்களை பலிகொடுத்தது மாத்திரமல்ல ஈடுவைக்கின்ற செயல்களையும் செய்து விட்டுபோய்விட்டார்கள் தொடர்ந்து இருக்கின்றவர்கள் அதனை செய்துகொண்டிருக்கின்றார்கள்.

நீங்கள் சரியானவர்களை தெரிவு செய்யுங்கள், அப்போதுதான் நீங்கள் வாழ்க்கையில் முன்னேறலாம் என்று கடந்த காலங்களிலும் சொல்லியுள்ளேன்.

முன்னேற்றம் என்பது அடிமைத்தனமான வாழ்கையல்ல. கௌரவமான வாழ்கையுடன் இன்று நாங்கள் அப்படித்தான் இருக்கின்றோம். இந்த அழிவு யுத்தம் முடிவிற்கு வந்த பின்னர் எங்கள் கௌரவத்தில் எதுவித மாசும் ஏற்படவில்லை.

இன்று இருக்கின்ற கௌரவமான நிலைமையை பாதுகாத்து நாங்கள் மேலும் வளர்த்தெடுக்கவேண்டும்.

அப்படியான நிலைமைக்கு நாங்கள் செல்லவேண்டுமாக இருந்தால் சரியாக நீங்கள் உங்கள் பிரதிநிதிகளை அடையாம் கண்டு தெரிவுசெய்யவேண்டும்.

இந்த மாவட்டத்திற்கு அரசாங்கம் நிறைய நிதிகளை ஒதுக்கியுள்ளது. அரசாங்கம் எந்த பாரபட்சமும் இன்றி அந்தந்த பிரதேசங்களுக்கு தேவையான நிதிகளை ஒதுக்கியுள்ளது.

நாங்கள் 80களில் ஆயுதம் தூக்கியபோது அன்று இருந்த ஆட்சியாளர்கள் ஒரு பாராபட்சமாக அல்லது மாற்றான் தாய் மனப்பான்மையுடன் அல்லது இன ரீதியாகத்தான் அணுகினார்கள். ஆனால் இன்று உள்ள அரசாங்கம் அப்படி அல்ல, நானும் அரசின் மூத்தஅமைச்சராக இருக்கின்றேன்.

ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தலைமையில் பிரதமர் மகிந்த ராஜபக்ச வழிகாட்டலில் இந்த அரசாங்கம் முன்னோக்கி செல்கின்றது. ஆனால் ஊடகங்கள் மக்களுக்கு தவறாக அவற்றை வெளியிடுகின்றன.

மக்களின் பிரச்சினைகளை ஒன்றரை ஆண்டுகளுக்குள் தீர்த்துவிடுவோம் என்று கூறிய கடந்த கால ஆட்சியாளர்கள், திறைசேரியை காலிபண்ணிவிட்டே எங்களுக்கு கொடுத்தார்கள்.

புதுக்குடியிருப்பு விசேட நிருபர்


Add new comment

Or log in with...