ஒலிபண்ட் தோட்டத்தில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

களனிவெளி பிலான்டேசன் நிர்வாகத்திற்கு கீழ் இயங்கும் நுவரெலியா  ஒலிபண்ட் தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக அத்தோட்டத் தொழிலாளர்கள் இன்று (18) அடையாயாள பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

தோட்டத் அதிகாரி சர்வாதிகாரமாக செயல்படுவதால் அவரை உடனடியாக இடமாற்றம் செய்யும்படி கோரி தொழிலாளர்கள் இந்த ஆர்ப்பாட்டதை  மேற்கொண்டனர். தோட்ட அதிகாரி தொழிலாளர்களை சர்வாதிகாரமாக வழி நடத்துவதாகவும், தோட்டத்தில் தொழிலாளர்கள் குடியிருக்கும் வீட்டிற்கு அருகிலும் தங்களது விவசாய காணியில் தங்களது சொந்த செலவில்  வீடு கட்டுவதற்கும் மலசலகூடம் கட்டுவதற்கும் அனுமதி வழங்க தோட்ட அதிகாரி மறுத்து வருவதாகவும்,  தொழிலாளர்களின் செலவில் கட்டப்பட்ட வீடுகளையும் பொலிஸாரின் உதவியுடன் தோட்ட அதிகாரி உடைத்ததாகவும் போராட்டத்தில்  ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

மேலும் இத்தோட்டத்தில் லயின் வீடுகளில் இரண்டு மூன்று குடும்பங்கள் ஒரே வீட்டில் வாழ்வதால் இடவசதியில்லாமல் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். அத்துடன் தொழிலாளர்களின் பிள்ளைகளை பாடசாலைகளில் சேர்ப்பதற்கு பதிவு கடிதம் கேட்டால் தோட்ட அதிகாரி கடிதம் வழங்குவதில்லை. இதனால் பிள்ளைகளை பாடசாலைகளில் சேர்க்க முடியாமல் தொழிலாளர்கள் அவஸ்த்தைபடுவதாகவும் தெரிவிக்கின்றனர்.

நாட் சம்பளத்திற்கு 20 கிலோவிற்கு மேல் கொழுந்து பறிக்க வேண்டும் எனவும், வேலை பழுவையும் அதிகரித்துள்ளதாகவும் 1000 ரூபா சம்பளம் வழங்கப்படுவதில்லை. தொழிலாளர்களின் பிரச்சனைகளை  தோட்ட அதிகாரிகள் செவிமடுப்பதில்லை. தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய சலுகைகளையோ அல்லது உரிமைகளையோ தோட்ட அதிகாரி வழங்காமல் தோட்ட தொழிலாளர்களை கொத்தடிமைகளாக வழி நடத்துவதாகவும்   தோட்ட அதிகாரி சர்வாதிகாரியாக செயல்படுவதால் உடனடியாக தோட்ட அதிகாரியை இடம் மாற்ற வேண்டும் எனவும், இல்லாவிட்டால் பாரிய போராட்டம் நடத்தவிருப்பதாகவும் ஆர்ப்பாட்டகாரர்கள் தெரிவித்தனர்.

(தலவாக்கலை குறூப் நிருபர்)


Add new comment

Or log in with...