கொவிட்-19: ஒட்சிசன் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து மத்திய அரசு மீளாய்வு

கொவிட் 19: ஒட்சிசன் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து மத்திய அரசு மீளாய்வு-COVID19-India-Oxygen

கொவிட்-19 பெருந்தொற்றை உரிய நேர காலத்தில் திறம்பட முகாமைத்துவம் செய்வதற்கான வென்டிலேட்டர்கள், ஒட்சிசன் இயந்திரத் தொகுதிகள், ஒட்சிசன் செறிவூட்டிகள் மற்றும் ஒட்சிசன் சிலிண்டர்கள் உள்ளிட்ட ஒட்சிசன் உபகரணங்களின் முழுமையான தயார்நிலை வசதிகள் குறித்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுடன் மீளாய்வு செய்வதற்கான உயர்மட்டக் கூட்டம் இந்திய மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

'வீடியோ கொன்பிரன்ஸின்' மூலம் இடம்பெற்ற இக்கூட்டத்தில், 'சகல ஒட்சிசன் உபகரணங்களையும், அனைத்து சுகாதார வசதிகளிலும் கள அளவில் சோதனை செய்து, எந்தவொரு அவசர நிலையையும் எதிர்கொள்வதற்கு ஏற்ப தயார் நிலையில் வைத்திருப்பதை உறுதி செய்வது மாநிலங்களதும் யூனியன் பிரதேசங்களதும் முதன்மையானதும் முக்கியமானதுமான பொறுப்பு' என்று மத்திய சுகாதார செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில், மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் ஈ.சி.ஆர்.பி. -ii நிதியை முழுமையாகவும் உகந்த முறையிலும் பயன்படுத்துவதோடு அவை தொடர்பில் தினசரி மீளாய்வு செய்து உறுதிப்படுத்திக்கொண்டு, செலவினங்களை என்.எச்.எம். பி.எம்.எஸ் தளத்தில் பதிவேற்றம் செய்யுமாறு கோரப்பட்டுள்ளது. துணை மாவட்ட மட்டத்தில் சுகாதாரப் பராமரிப்பு வசதிகளை மேலும் வலுப்படுத்துவதற்கான மேலதிக நிதியொதுக்கீடுகளை மேற்கொள்வதற்கான தகுதியாக இது அமையும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த உயர் மட்டக் கூட்டத்தில் மத்திய சுகாதாரச் செயலாளர் மேலும் குறிப்பிடுகையில், ஈ.சி.ஆர்.பி. -ii நிதியை திரவ மருத்துவ ஒட்சிசன் (எல்.எம்.ஒ) தாங்கிகளையும் மருத்துவ எரிவாயு குழாய் கட்டமைப்புக்களையும் அமைப்பதற்கும் பயன்படுத்தலாம். திரவ மருத்துவ ஒட்சிசன் தாங்கிகளை அமைப்பதற்கு, அவற்றின் செயற்பாடு மற்றும் பாதுகாப்பு குறித்த அனுமதியை பெற்றோலியம் மற்றும் வெடிபொருட்கள் பாதுகாப்பு அமைப்பில் பெற்றுக்கொள்ள வேண்டும்.

மேலும், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சொந்த நிதி மற்றும் சி.எஸ்ஆர். நிதியின் கீழ் அமைக்கப்படும் ஒட்சிசன் உபகரணத் தொகுதிகளை தினமும் மீளாய்வு செய்வதன் ஊடாக யுத்த காலத்தைப் போன்று அவற்றைப் பராமரிப்பது அவசியம். நோயாளரின் படுக்கைக்கு ஒட்சிசன் போதுமான தூய்மையுடனும் கசிவுகள் இன்றி பரிந்துரைக்கப்பட்ட அழுத்தத்துடன் தொடராக விநியோகமாவதை உறுதி செய்வதற்காக ஒட்சிசன் உபகரணத் தொகுதிகளை மாநிலங்கள் உறுதிசெய்து கொள்ள வேண்டும். இதன் நிமித்தம் ஒட்சிசன் உபரணத் தொகுதிகளின் இயங்கு மாணிகளும் அவற்றின் செயற்பாட்டு திறன்களும் பரீட்சிக்கப்படல் வேண்டும்.

தனியார் வைத்தியசாலைக் கட்டமைப்புக்களிலும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் ஒட்சிசன் உபகரணத் தொகுதிகள் அமைக்கப்படுவதையும் மாநிலங்கள் கண்காணிக்க வேண்டும். அத்தோடு கள சுகாதார வசதிகள் கட்டமைப்புகளுக்கு வழங்கப்பட்டுள்ள வென்டிலேட்டர்களை துரிதமாக அமைத்து அவற்றின் செயற்பாட்டையும் மாநிலங்கள் உறுதி செய்து கொள்ளத் தவறக்கூடாதென அவர் ஆலோசனை வழங்கியுள்ளதாக ஏ.என்.ஐ. குறிப்பிட்டுள்ளது.

அத்தோடு வென்டிலேட்டர்கள் தொடர்பிலான எந்தவொரு புகாரையும் 2021 ஆகஸ்ட் 30 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இணையதளத்தின் ஊடாகப் பதிவு செய்யுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.


Add new comment

Or log in with...