வவுனியா ஈரட்டை பகுதியில் 264.93 கிலோகிராம் கேரளா கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவரை இராணுவத்தினர் கைது செய்துள்ளனர்.
வன்னி இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து நேற்றையதினம் (15) பிற்பகல் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த லொறி ஒன்றை, அலகல்ல சந்திக்கு அருகில் இராணுவத்தினர் சோதனையிட்ட போதே கேரளா கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளதாக வவுனியா ஈரட்டை பெரியகுளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த வாகனத்தை இடைமறித்து சோதனை மேற்கொண்ட இராணுவத்தினர் குறித்த லொறியின் பின்புறம் உள்ள இரகசிய அறையொன்றில் இருந்து 123 சிறிய பொதிகளாக செய்யப்பட்டிருந்த 265 கிலோ கேரளா கஞ்சாவை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் 28 வயதான, யாழ்ப்பாணம் கீரிமலை பகுதியை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரையும் கைப்பற்றப்பட்ட கஞ்சாவையும் இன்றையதினம் (16) வவுனியா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக இராணுவ புலனாய்வு அதிகாரிகளுடன், ஈரட்டை பெரியகுளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(ஓமந்தை விசேட நிருபர் - பி. சதீஷ், வவுனியா விசேட நிருபர் - கே. வசந்தரூபன்)
Add new comment