லிட்ரோ எரிவாயு முனையத்தை ஜனாதிபதி பார்வையிட்டார்

லிட்ரோ எரிவாயு முனையத்தை ஜனாதிபதி பார்வையிட்டார்-President Gotabaya Rajapaksa Visits Litro Gas Terminal Kerawalapitiya

கெரவலப்பிட்டியவில் அமைந்துள்ள லிட்ரோ எரிவாயு முனையத்தை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (13) முற்பகல் பார்வையிட்டார்.

முனையத்தில் உள்ள பிரதான செயற்பாட்டுப் பிரிவுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி, கப்பலில் இருந்து எரிவாயு கொண்டுவருதல் மற்றும் களஞ்சியப்படுத்தல் வரையிலான செயற்பாடுகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டார்.

இம்முனையத்தில், தலா 2,000 தொன்களைக் கொண்ட நான்கு களஞ்சியத் தாங்கிகள் உள்ளன. இக்களஞ்சியசாலையில், தினசரி 8,000 தொன் எரிவாயுக் கையிருப்பு பேணப்பட்டு வருகின்றது. லிட்ரோ நிறுவனத்தின் மாதாந்த எரிவாயு விநியோகம் 30,000 தொன்களாகும். இதற்காக, மாதந்தோறும் 07 கப்பல்கள் மூலம் எரிவாயு கொண்டு வரப்படுகின்றது.

பவுசர் ரக வாகனங்கள் மூலம் தொழிற்சாலைகளுக்கு எரிவாயு விநியோகித்தல் மற்றும் கொள்கலன்களுக்கு எரிவாயு நிரப்பல் போன்ற பணிகள், கெரவலப்பிட்டிய முனையத்திலேயே இடம்பெறுகின்றன. 42 விற்பனை முகவர் நிலையங்கள் மற்றும் 12,000 விற்பனை நிலையங்கள் ஊடாக, நாடு முழுவதும் லிட்ரோ எரிவாயு விநியோகிக்கப்படுவதாக அந்நிறுவனம் தெரிவிக்கிறது.

கடந்த சில நாட்களில், தினசரி 70,000 - 80,000 வரையிலான எரிவாயுக் கொள்கலன்கள் நாடு முழுவதும் விநியோகிக்கப்பட்டுள்ளன. தற்போது நிலவும் எரிவாயுவுக்கான கேள்வியை, எதிர்வரும்  நாட்களில் பூர்த்திசெய்ய முடியும் என்றும், அந்நிறுவனம் நம்பிக்கை கொண்டிருக்கிறது.

லிட்ரோ எரிவாயு நிறுவனத்துக்குச் சொந்தமான ஹம்பாந்தோட்டை முனையத்தின் செயற்பாடுகள் மற்றும் எரிவாயு ஆராய்ச்சிக்கான நிறுவனம் ஒன்றை ஸ்தாபித்தல் போன்ற பணிகள், இந்த வருடம் முன்னெடுக்கப்படும் என்று, எரிவாயு நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்க தெரிவித்தார்.

எரிவாயுக் களஞ்சியத் தாங்கி வளாகம் மற்றும் எரிவாயு நிரப்பும் நிலையத்தைப் பார்வையிட்ட ஜனாதிபதி, நிறுவனத்தின் ஊழியர்களிடம் கலந்துரையாடியதுதோடு, விபரங்களையும் கேட்டறிந்துகொண்டார்.

அமைச்சர் பந்துல குணவர்தன, இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்ஹ, ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல, தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் ஜயந்த டீ. சில்வா ஆகியோரும் இச்சந்தர்ப்பத்தில் கலந்துகொண்டிருந்தனர். 


Add new comment

Or log in with...