தொலைபேசி காதலனை நம்பிச் சென்ற பெண் கூட்டு வன்புணர்வு

தவறுதலான தொலைபேசி அழைப்பின் (Missed Call) ஊடாக அறிமுகமான காதலனை நம்பி சென்ற 18 வயது யுவதியை நான்கு பேர் கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய பின்னர் யுவதியை வீதியில் இறக்கி விட்டு தலைமறைவாகியுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் பாதிக்கப்பட்ட யுவதியால் நேற்று (11) மாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில், தெரியவருவதாவது,

குறித்த யுவதியின் தொலைபேசிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வந்திருந்த தவறுதலான தொலைபேசி அழைப்பின் ஊடாக அறிமுகமான இளைஞனுடன் நட்பு ஏற்பட்டு பின்னர் அது காதலாக மாறியுள்ளது. இருவரும் ஒருவரை ஒருவர் நேரில் சந்திக்காத நிலையில் காதலித்து வந்துள்ளனர்.

அந்நிலையில் குறித்த இளைஞன், யுவதிக்கு அழைப்பை மேற்கொண்டு அவரை திருமணம் செய்வதற்கு தயாராக இருப்பதாகவும், வீட்டை விட்டு வெளியேறி தன்னுடன் வருமாறும் தெரிவித்துள்ளதோடு, வரும் போது வீட்டில் இருந்து நகைகள் மற்றும் பணம் என்பவற்றை எடுத்து வருமாறும் கூறியுள்ளார். இளைஞனின் ஆசை வார்த்தையை நம்பிய குறித்த யுவதி, தன்னுடைய சங்கிலி உள்ளிட்ட சொற்ப நகைகளையும், 40 ஆயிரம் ரூபாய் பணத்தினையும் எடுத்துக்கொண்டு நேற்று (11) அதிகாலை இளைஞன் கூறிய இடத்திற்கு சென்றுள்ளார்.

இருவரும் சிற்றுண்டி சாப்பிட்டு, பின்னர் காலை 10 மணியளவில் இளைஞன், அவரை தன்னுடைய தாய்க்கு அறிமுகம் செய்து வைப்பதாக, வடமராட்சி திக்கம் பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார்.

அங்கு ஆள் நடமாற்றம் அற்ற பகுதி ஒன்றுக்கு யுவதியை அழைத்து சென்று ஆசை வார்த்தைகளை கூறி, உறவு கொண்டுள்ளார். பின்னர், தண்ணீர் வாங்கி வருவதாக கூறி அவ்விடத்தில் யுவதியை தனியே விட்டு விட்டு சென்றுள்ளார்.

இளைஞன் சென்று சில நிமிடங்களில் மூன்று இளைஞர்கள் அவ்விடத்திற்கு சென்று யுவதியை பலாத்காரமாக வன்புணர்ந்து உள்ளனர். பின்னர் யுவதியை அழைத்து சென்ற இளைஞனும் அவ்விடத்திற்கு வந்து நான்கு பேருமாக யுவதியை கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளனர்.

பின்னர் யுவதியிடம் இருந்த 40 ஆயிரம் ரூபாய் பணம் , நகைகள் , தொலைபேசி என்பவற்றை கொள்ளையடித்த பின்னர் , யுவதியை அழைத்து வந்த இளைஞன் யுவதியை மீண்டும் தனது மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்று யுவதியின் கிராமத்திற்கு அருகில் வீதியில் இறக்கி விட்டு தலைமுறைவாகியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் யுவதியினால் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் , சம்பவம் இடம்பெற்ற பகுதி பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதி என்பதனால், முறைப்பாட்டை நெல்லியடி பொலிஸார் பருத்தித்துறை பொலிஸாரிடம் ஒப்படைதுள்ளனர்.

பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில், சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் துன்னாலை பகுதியை சேர்ந்த நான்கு இளைஞர்களை அடையாளம் கண்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து குறித்த நான்கு பேரும்  தலைமறைவாகியுள்ளமை பொலிஸார் கண்டறிந்துள்ளனர். அதனால் குறித்த நான்கு இளைஞர்கள் மீதும் பொலிஸாருக்கு வலுவான சந்தேகம் ஏற்பட்டுள்ள நிலையில் அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ளனர்.

(யாழ்.விசேட நிருபர்) 


Add new comment

Or log in with...