சீன உர நிறுவனத்திற்கு 69 இலட்சம் டொலர் செலுத்தியதாக மக்கள் வங்கி அறிவிப்பு

சீன உர நிறுவனத்திற்கு 69 இலட்சம் டொலர் செலுத்தியதாக மக்கள் வங்கி அறிவிப்பு-People's Bank Pays USD 6.9 million to the Chinese Fertilizer Company-Qinqdao Seawin Biotech Group

சர்ச்சைக்குரிய சீன சேதன உர நிறுவனத்திற்கு 6.9 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (USD 6,873,975) செலுத்தப்பட்டுள்ளதாக, மக்கள் வங்கி அறிவித்துள்ளது.

இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள மக்கள் வங்கி இதனை தெரிவித்துள்ளது.

தீங்கு விளைவிக்கும் பக்டீரியாவைக் கொண்டதாகக் கூறப்படும் சீன சேதன உரக் கப்பலுக்கான கொடுப்பனவை தடுப்பது தொடர்பாக, கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றம் பிறப்பித்த தடை உத்தரவு கடந்த திங்கட்கிழமை நீக்கப்பட்டதைத் தொடர்ந்து குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, மக்கள் வங்கி அறிவித்துள்ளது.

Qinqdao Seawin Biotech Group Company Limited எனும் சீன நிறுவனத்திடமிருந்து குறித்த சேதன உரமானது Ceylon Fertlizer Company Limited மற்றும் Colombo Commercial Fertilizer (pvt) Limited ஆகிய நிறுவனத்தால் கொள்வனவு செய்யப்பட்டதற்கு அமைய மேற்கொள்ளப்பட்ட கொள்வனவு கோரிக்கைக்கமைய, குறித்த கொடுப்பனவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் குறித்த சேதன உரத்தில் தீங்கு விளைவிக்கும் பக்டீரியாக காணப்படுவதாக சோதனைகளில் தெரிய வந்ததைத் தொடர்ந்து, அதனை ஏற்றி வந்த கப்பலை இலங்கை ஏற்றுக் கொள்ளவில்லை.

இதனைத் தொடர்ந்து, இலங்கை உர நிறுவனம் இது தொடர்பில் தாக்கல் செய்திருந்த மனு தொடர்பில் குறித்த உரத்தை விநியோகிக்கும் Qingdao Biotech Group Co. Ltd. எனும் சீன நிறுவனம் மற்றும் இலங்கையிலுள்ள அதன் முகவர் நிறுவனம் மற்றும் அவற்றுக்கு பணம் வழங்குவதை தடுத்து மக்கள் வங்கி ஆகியவற்றுக்கு எதிராக இடைக்காலத் தடையுத்தரவு வழங்கப்பட்டிருந்தது.

குறித்த சீன நிறுவனத்திற்கான கொடுப்பனவை இடைநிறுத்தியமை தொடர்பில், மக்கள் வங்கியை கறுப்புப்பட்டியலில் இணைத்துள்ளதாக, இலங்கையில் உள்ள சீன தூதரகம் அறிவித்திருந்தது.

அதன் பின்னர், இலங்கையில் உள்ள தேசிய தாவர தனிமைப்படுத்தல் சேவைகள் மேலதிக பணிப்பாளரிடம் இருந்து 8 மில்லியன் அமெரிக்க டொலர்களை நஷ்டஈடாக கோரி, சர்ச்சைக்குரிய சேதன உரத்தை விநியோகித்த சீன நிறுவனம் நஷ்டஈட்டு கோரிக்கை கடிதத்தை அனுப்பி வைத்திருந்தது.

இதன் பின்னர், இரு தரப்பு பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து SLSI தரநிர்ணயங்களுக்கு இணங்க சேதன உரத்தை மீள் உற்பத்தி செய்யுமாறு அந்நிறுவனத்திடம் கோரப்பட்டிருந்தது.

சட்ட மாஅதிபரின் ஆலோசனையுடன் சீன உர நிறுவனத்திற்கு 6.7 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க அரசாங்கம் முடிவு செய்திருந்ததுடன், SLSI தரநிர்ணயங்களுக்கு இணங்க சேதன உரத்தை மீள் உற்பத்தி செய்யுமாறு அந்நிறுவனத்திடம் கோரப்பட்டிருந்தது.

அதனையடுத்து, தரமான உரத்தை மீள வழங்குவதன் அடிப்படையில், இரு தரப்பினருக்கும் இடையில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சீன சேதன உர நிறுவனத்திற்கான கொடுப்பனவை தடுப்பது தொடர்பாக, கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றம் பிறப்பித்த தடை உத்தரவு நீக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து தற்போது மக்கள் வங்கியின் ஊடாக குறித்த நிறுவனத்திற்கான பணம் இன்று (07) செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...