12 - 15 வயது சிறுவர்களுக்கு வெள்ளிக்கிழமை முதல் கொவிட் தடுப்பூசி

12 - 15 வயது சிறுவர்களுக்கு வெள்ளிக்கிழமை முதல் கொவிட் தடுப்பூசி-COVID19 Vaccine for Age Between 12-15-January 10

- திங்கட்கிழமை முதல் அனைத்து மாணவர்களையும் பாடசாலைக்கு அழைக்க வழிகாட்டல்

இலங்கையில் 12-15 வயதுடைய சிறுவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி எதிர்வரும் வெள்ளிக்கிழமை (07) ஆரம்பிக்கப்படுமென சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சில் இன்று (05) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதற்கு முன்னதாக, 15-19 வயதுடைய சிறுவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. அது தவிர, 12 - 15 வயதுக்குட்பட்ட பல்வேறு சிக்கல்களைக் கொண்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டதுடன், இதில் சுமார் 30,000 சிறுவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

தற்போது, ​​12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு சுகாதாரப் பிரிவினால் ஒரு டோஸ் தடுப்பூசி மாத்திரமே பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்குவதுடன் இணைந்ததாக, பூஸ்டர் தடுப்பூசியை இதுவரை பெற்றுக்கொள்ளாத பாடசாலை ஆசிரியர்களுக்கும் அந்தந்த இடங்களில் தடுப்பூசியை பெற முடியுமென அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

கல்விசாரா ஊழியர்கள், பாடசாலை மாணவர்களின் போக்குவரத்தில் ஈடுபடுபவர்களும் இதில் பூஸ்டர் தடுப்பூசியைப் பெற முடியுமென்றும், இதன் மூலம் கொவிட் பரவலிலிருந்து சிறுவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உச்சபட்ச நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சர் கூறினார்.

வழமை போன்று பாடசாலைக்கு மாணவர் வருகை
நாடு புதிய இயல்புநிலைக்கு திரும்பியுள்ளதைத் தொடர்ந்து, எதிர்வரும் திங்கட்கிழமை (10) முதல் பாடசாலைகளை வழமையான வகையில் முன்னெடுத்துச் செல்ல, அனைத்து மாணவர்களும் ஒரே நேரத்தில் பாடசாலைக்கு திரும்புவதை உறுதி செய்வதற்கான சுகாதார வழிகாட்டல்களை வெளியிடவுள்ளதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர், கட்டம் கட்டமாக மாணவர்கள் பாடசாலைக்கு அழைக்கப்பட்ட வந்த நிலையில், எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மாணவர்களின் வருகை வழமை போன்று இடம்பெறும் என அவர் தெரிவித்தார்.


Add new comment

Or log in with...