சுகாதாரத்துறை எதிர்கொண்டுள்ள கொரோனா சவால்கள் இன்னும் முடிவடையவில்லை

நாட்டின் சுகாதாரத் துறை எதிர்கொண்டுள்ள கொரோனா சவால் இன்னும் முடிவடையவில்லை என சுகாதார அமைச்சர் கெ​ெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். 

அதேவேளை, இந்த ஆண்டும் சவால் மிகுந்த ஆண்டாக இருக்கும் என தெரிவித்துள்ள அவர், கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் சுகாதாரத் துறையின் அனைத்துத் தரப்பினரும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டதால் அதனைக் கட்டுப்படுத்துவதில் நாம் வெற்றிபெற முடிந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.  கடந்த 2021ஆம் ஆண்டு சாத்தியமான வகையில் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு நடவடிக்ைககள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் பல சவால்களை நாம் வெற்றிகொண்டுள்ளோம். மேலும் சில சவால்களை இந்த வருடத்தில் வெற்றிகொள்ள வேண்டியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

புதிய வருடத்தில் சுகாதார அமைச்சில் உத்தியோகபூர்வ நடவடிக்கைகளை சுபவேளையில் ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இராஜாங்க அமைச்சர்களான சன்ன ஜயசுமன, சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே, சுகாதார அமைச்சின் செயலாளர் விசேட மருத்துவ நிபுணர் சஞ்சீவ முனசிங்க உள்ளிட்ட அமைச்சின் உயரதிகாரிகள் இந்த நிகழ்வில்  கலந்துகொண்டிருந்தனர்.  அமைச்சர் அங்கு மேலும் தெரிவிக்ைகயில், கடந்த வருடத்தில் சுகாதார சேவையின் உயர் மட்டத்திலிருந்து கீழ் மட்டம் வரையில் எந்த பேதமும் இன்றி கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தல் நடவடக்கைக்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளமையால் இந்த வருடத்திலும் சவால்களை வெற்றிகொள்வது கடினமானதாக அமையாது. 

நாட்டில் தற்போது சாத்தியமான தடுப்பூசி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதனூடாக கொரோனா வைரஸ் பரவல் பெருமளவில் தடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தடுப்பூசி வழங்கலில் உலகின் மூன்று அல்லது நான்கு நாடுகளுக்குள் இலங்கையும் முன்னணி வகிக்கின்றது. அது எமக்கு கிடைத்த வெற்றியென்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

(லோரன்ஸ் செல்வநாயகம்)


Add new comment

Or log in with...