வெள்ளத்தில் மூழ்கியது சென்னை மாநகரம்!

ஐந்து வருட காலத்தில் பெய்த பெருமழை!

சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் நேற்றுமுன்தினம் பிற்பகல் தொடங்கிய கனமழை இடைவிடாது கொட்டித் தீர்த்தது. ஐந்து மணி நேரத்தில் 20 செ.மீ (200 மி.மீ) மழை பெய்ததால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் வெள்ளக்காடாக மாறின. சுரங்கப் பாதைகளும், வீதிகளும் மூடப்பட்டன. வீதிகளில் ஓடிய மழை நீரால் போக்குவரத்து முடங்கியது.

போக்குவரத்து நெரிசல் காரணமாக, வாகனங்கள் அணிவகுத்து நின்றன. எதிர்பாராத நிலையில் திடீரெனப் பெய்த கடும் மழையால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து மழை இல்லை என்பதால், மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியிருந்தனர். இந்நிலையில், தமிழக கடற்கரையோரம் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, நேற்றுமுன்தினம் பிற்பகல் முதல் இரவு வரை கனமழை பெய்தது. இடைவிடாது மழை கொட்டித் தீர்த்தது.

கனமழை காரணமாக சென்னையில் பெரும்பாலான வீதிகளில் மழைநீர் குளம் போல் தேங்கியது. மணிக்கணக்கில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதேபோல அடையாறு, சைதாப்பேட்டை, கிண்டி, திருவான்மியூர், நீலாங்கரை, சோழிங்கநல்லுார், தரமணி, வேளச்சேரி என, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் கனமழை காரணமாக வீதிகளில் வெள்ளம் ஓடியது.

கால்வாயில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக, நேற்றுமுன்தினம் தலைமைச் செயலக செய்தித் தொடர்பு அலுவலகம், செய்தியாளர்கள் அறை, சட்டசபை நிருபர்கள் அறைக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. வீதியில் தண்ணீர் தேங்கியதால், வாகன சாரதிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். பணி முடிந்து வீடு திரும்பியவர்கள் நனைந்தபடி சென்றனர். பல இடங்களில் வாகனங்கள் தண்ணீரில் மூழ்கியதால் அவற்றை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. சில மணி நேர மழையில் மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு பாதிக்கப்பட்டது.

ஐந்து ஆண்டுகளுக்கு பின்னர் நேற்றுமுன்தினம் சென்னையில் அதிக மழை பெய்துள்ளது.


Add new comment

Or log in with...