சீஷெல்ஸில் இலங்கையர் ஒருவர் படுகொலை; விசாரணைகள் ஆரம்பம்

சீஷெல்ஸில் இலங்கையர் ஒருவர் படுகொலை; விசாரணைகள் ஆரம்பம்-Seychelles Police Open Investigation Death of Sri Lankan-La Digue

சீஷெல்ஸ் நாட்டில் இலங்கையர் ஒருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் சீஷெல்ஸ் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சீஷெல்ஸின் லா டிகு (La Digue) தீவில் கட்டுமான நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்த 47 வயதுடைய ஹரிந்திர தொன் பொன்னவிலகே எனும் இலங்கையர் ஒருவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக, பிரேத பரிசோதனை முடிவுகளிலிருந்து தெரியவந்துள்ளது.

குறித்த நபரின் சடலம் கடந்த டிசம்பர் 10ஆம் திகதி காலை 8.50 மணியளவில், அவர் தங்கியிருந்த அவரை பணிக்கமர்த்தியிருந்த வர்த்தகரின் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் 4 நாட்களாக பணிக்கு திரும்பாத நிலையில், அவரை பணிக்கமர்த்தியிருந்த கட்டுமான நிறுவன தொழிலதிபர், அவர் தங்கியிருந்த வீட்டிற்கு சென்ற போது அங்கு யாருமில்லை என்பது போன்று உணர்ந்துள்ளார். இதனைனத் தொடர்ந்து குறித்த வீட்டின் படுக்கையறையின் ஜன்னல் வழியாக பார்த்தபோது, அந்நபர் தரையில் வீழ்ந்து கிடப்பதை கண்டுள்ளதோடு, தனது அழைப்புக்பு பதிலளிக்காததைத் தொடர்ந்து அவர் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

பின்னர் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் குறித்த சடலத்தில் சந்தேகத்திற்கிடமான எவ்வித அடையாளங்களும் இல்லாத நிலையில், 3 நாட்களுக்கு பின்னர் பொலிஸாரால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க மேற்கொள்ளப்பட்ட பிரேதப் பரிசோதனையில், அவர் கழுத்து நெரிக்கப்பட்டு மூச்சுத் திணறி உயிரிழந்திருந்தமையும் தெரியவந்துள்ளது.

அதற்கமைய, குறித்த கொலை தொடர்பில் இதுவரை சந்தேகத்தின் பேரில் எவரும் கைது செய்யப்படவில்லை என்பதோடு, அந்நாட்டு பொலிசார் தொடர்ச்சியாக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


Add new comment

Or log in with...