காதல் விவகாரம்: அப்பா, சித்தப்பா தாக்குதலில் 14 வயதுச் சிறுமி மரணம்

- தாக்குதலுக்குள்ளாகி உடல்நிலை சரியில்லாமல் புலம்பிய நிலையில் மீண்டும் தாக்குதல்

கம்பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மவுன்ட்டெம்பல் பகுதியில் தாக்குதலுக்குள்ளான, 14 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக கம்பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் சிறுமியின் தந்தையும், சிறிய தந்தையும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 13ஆம் திகதி கம்பளை அங்கம்மனையில் உள்ள சித்தப்பாவின் வீட்டிற்கு குறித்த சிறுமி அழைத்துச் செல்லப்பட்டிருந்தார். சித்தப்பாவின் மகள் மற்றும் தாயாரின் துணைக்காக குறித்த சிறுமி இவ்வாறு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

சில நாட்கள் அங்கு இருந்த அவர், கடந்த 19ம் திகதி மீண்டும் வீடு திரும்பியுள்ளார்.

இதனை அடுத்து அவர் பல முறை வாந்தி எடுத்துள்ளார்.

தனது மகளின் காதல் விவகாரம் தொடர்பான விடயங்களை மறைத்ததாக தெரிவித்து சிறுமியின் சிறிய தந்தை அவரைத் தாக்கியதாக அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

அதன்பின்னர் நேற்றுக் (21) காலை சிறுமி உடல்நிலை சரியில்லாமல் இரவு வேளையில் புலம்பிய போது, சிறுமியின் தந்தை மீண்டும் அவரை தாக்கியுள்ளதாக, குறித்த சிறுமியின் தங்கை வழங்கிய வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். இதன்போது சிறுமியின் தந்தை மது போதையில் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பின்னர், பிரதேசவாசிகள் சிறுமியை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முற்பட்ட போதிலும் தந்தை அதற்கு அனுமதிக்காததால், சிறுமியை அவரது தாயார் அருகில் உள்ள வீட்டிற்கு அழைத்துச் சென்றதாகவும், அங்கு சிறுமி பயந்துள்ளதால் தேசிக்காய் வெட்டுமாறு தெரிவித்ததாக தெரிவிக்கப்படுகின்து.

பின்னர் அதனைத் தொடர்ந்து அன்று பிற்பகல் 2.00 மணியளவில் சிறுமி மயக்கமடைந்த வீழ்ந்துள்ள நிலையில், கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆயினும் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் அறிவித்துள்ளனர்.

கம்பளையில் உள்ள பிரபல மகளிர் பாடசாலையொன்றில் கல்வி கற்கும் 14 வயதான மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த சிறுமியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கம்பளை வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. கம்பளை நீதிமன்றத்தின் நீதவானின் மரண விசாரணைகளின் பின் பிரேத பரிசோதனை இடம்பெற்று சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் சிறுமியின் தந்தை மற்றும் சிறிய தந்தை ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களை இன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக, கம்பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

(ஹட்டன் சுழற்சி நிருபர்)