இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான மிக்-27 ரக தாக்குதல் விமானம் ஒன்று மொரட்டுவை பல்கலைக்கழகத்திற்கு அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.
விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரண மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் திரஞ்ஜன் குணவர்தனவிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார்.
மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் நேற்று (21) இடம்பெற்ற நிகழ்வின் போதே இவ்விமானம் கையளிக்கப்பட்டது.
இலங்கை விமானப்படையினர் இதுவரை காலம் பயன்படுத்தி வந்து மிக்-27 ரக விமானத்தை சேவையில் இருந்து அப்புறப்படுத்திய நிலையிலேயே மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகளுக்காக இலங்கை விமானப்படையினால் வழங்கப்பட்டுள்ளது.
மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் இயந்திரப் பொறியியல் பீடத்தின் கீழ் செயற்படும் விமான சேவை பிரிவிற்கு இந்த தாக்குதல் விமானம் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.
மேற்படி பல்கலைக்கழகத்திற்கும் இலங்கை விமானப்படை க்கும் இடையிலான நீண்ட நாள் உறவின் பிரதிபலனாகவே இந்த விமானம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் விமான பொறியியல் சேவை கற்கைநெறி ஆரம்பிப்பதற்காக இலங்கை விமானப்படை தொடர்ச்சியான ஒத்துழைப்பை வழங்கி வந்துள்ளதாக விமானப்படை தலைமையகம் தெரிவிக்கின்றது.
இதேவேளை, விமானப்படையின் விமானப் பொறியியல் அவர்களின் அனுபவங்களை மொரட்டுவ பல்கலைக்கழகத்துடன் பகிர்ந்து கொள்வதற்கான உத்தியோகபூர்வ ஆவணங்களில் இருந்து தப்பினரும் கையொப்பமிட்டு பரிமாறிக் கொண்டனர்.
ஸாதிக் ஷிஹான்