தேவையைப் பொறுத்து ஒரு சில இடங்களில் மின் வெட்டு அமுல்படுத்தும் வாய்ப்பு

தேவையைப் பொறுத்து ஒரு சில இடங்களில் மின் வெட்டு அமுல்படுத்தும் வாய்ப்பு-Power Cut

நாட்டின் சில பிரதேசங்கள் மின்வெட்டை எதிர்நோக்கும் வாய்ப்பு காணப்படுவததாக மின்சக்தி அமைச்சு அறிவித்துள்ளது.

நுரைச்சோலை அனல் மின் நிலையம் அதன் முழுமையான உற்பத்தித் திறனை வழங்காத நிலை காணப்படுவதனால் இந்நிலை ஏற்பட்டுள்ளதாக, அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

நுரைச்சோலை அனல் மின்நிலையத்தால் வழங்கப்படும் 900 மெகாவாற்றின் முழுக் கொள்ளளவையும் தேசிய மின் கட்டமைப்பிற்கு இணைப்பதற்கான நடவடிக்கைகளின் அடிப்படையில், அதனை பழுதுபார்க்கும் பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டார்.

அதற்கமைய, நாட்டின் சில பகுதிகளில் அதி கூடிய கேள்வி காலப்பகுதியான இரவு வேளையில் சுமார் 30 - 45 நிமிடங்கள் வரை மின்சார விநியோகம் தடைப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,

கடந்த டிசம்பர் 03ஆம் திகதி நாட்டில் ஏற்பட்ட நாடளாவிய மின்சாரத் தடையைத் தொடர்ந்து, கடந்த சில நாட்களாக சில பிரச்சினையான சூழ்நிலைகளும் சவால்களும் எழுந்தன. இந்நிலையில் நாட்டின் சில பகுதிகளில் ஒரு சில நாட்களாக சுமார் ஒரு மணி நேரம் மின் தடை அமுல்படுத்தப்பட்டது. இருப்பினும், நுரைச்சோலை லக்விஜய அனல் மின் உற்பத்தி நிலையத்தின் மூன்று மின்பிறப்பாக்கிகளில் இரண்டை இணைத்ததன் மூலம், மின்சாரத் தடை நீக்கப்பட்டிருந்தது.

எனினும், தொழில்நுட்ப பிரச்சினை காரணமாக, லக்விஜய அனல் மின் நிலையத்தின் மூன்றாவது மின்பிறப்பாக்கியின் திறனை ஓரளவு குறைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இச்சூழ்நிலையில் சில பகுதிகளில் குறிப்பாக இரவு நேரங்களில் அதிக கேள்வி உள்ள காலப்பகுதியில் சுமார் 30 - 45 நிமிட மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.

ஆயினும், இது தற்காலிகமான நிலைதான் என்பதுடன் பழுதுபார்ப்பு முடிந்தவுடன் மின்பிறப்பாக்கிகள் மீண்டும் தேசிய கட்டமைப்புடன் இணைக்கப்படும்.

மின்சாரத் தேவைகளைப் பொறுத்து, தேசிய கட்டமைப்பினால் நிர்வகிக்க்கக் கூடிய ஆற்றல் இல்லாமல் போகும் நிலையில், குறிப்பாக மின்சாரத்தின் கேள்வியைப் பொறுத்து மின் வெட்டுக்கான நேரம் மட்டுப்படுத்தப்படுமென அவர் சுட்டிக்காட்டினார்.