சமூகத் தளங்களில் வேவு பார்த்த நிறுவனங்களுக்கு பேஸ்புக் தடை

ஏழு சைபர் கண்காணிப்பு நிறுவனங்களை, தங்களின் (மெடாவின்) தளங்களில் உள்ள பயனர்களை இலக்கு வைப்பதற்காக தடை செய்துள்ளதாக பேஸ்புக், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதளங்களின் தாய் நிறுவனமான மெடா கூறியுள்ளது.

சுமார் 50,000 பயனர்களுக்கு “தீங்கிழைக்கும் நடவடிக்கைகள்” பற்றிய எச்சரிக்கையைப் பெறுவர் என மெடாவின் புதிய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

போலி கணக்குகளை உருவாக்குவது, இலக்கு வைக்கப்பட்டுள்ளவர்களுடன் நட்பு கொள்வது, தகவல்களை சேகரிக்க ஹேக்கிங் முறைகளைப் பயன்படுத்துவது போன்ற நடவடிக்கைகளை கண்காணிப்பு நிறுவனங்கள் மேற்கொண்டதாக குற்றம் சாட்டியுள்ளது மெடா.

பத்திரிகையாளர்கள் மனித உரிமை ஆர்வலர்கள் உள்ளிட்ட தனிநபர்களை இலக்குவைத்து இந்த நிறுவனங்கள் தாக்குதல் நடத்தியதாக மெடா குற்றம் சாட்டியுள்ளது.

ஒரு மாத கால விசாரணையைத் தொடர்ந்து பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் ஆப் ஆகிய தளங்களில் மெடாவால் சுமார் 1,500 பக்கங்கள் மற்றும் கணக்குகள் நீக்கப்பட்டுள்ளதாக அதன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.