2022 வரவு செலவுத் திட்டம் 2/3 பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றம்

- ஆதரவு 157; எதிராக 64

2022 வரவு செலவுத் திட்டம் 2/3 பெரும்பான்மை வாக்குகளால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இன்று (10) இடம்பெற்ற வரவு செலவுத் திட்டத்தின் 3ஆம் வாசிப்பின் மீதான வாக்கெடுப்பின் போது, அதற்கு ஆதரவாக 157 வாக்குகளும், எதிராக 64 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

அதற்கமைய 2022 வரவு செலவுத் திட்டம் திருத்தங்களுடன் 93 பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

03 ஆம் வாசிப்புக்கு வாக்கெடுப்பு நடத்துமாறு எதிரணி கோரிதையடுத்து சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அதற்கான அழைப்பை விடுத்தார். இலத்திரனியல் முறையின் கீழ் எம்.பிக்கள் வாக்களித்தனர்.

ஆளும் தரப்புடன் பொதுஜன பெரமுன எம்.பிக்களும் கூட்டணி கட்சி எம்.பிக்களும் எதிரணியை சேர்ந்த முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி எம்.பிக்கள் வாக்களித்தனர்.

இதன் போது முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் மக்கள் காங்கிஸ் பாராளுமன்ற எம்.பிக்களான எச்.எம்.எம்.ஹரீஸ், எம்.முஷர்ரப், நஸீர் அஹமட், இஷாக் ரஹ்மான், ஏ.எஸ்.எம்.ரஹீம், எம்.எஸ்.தௌபீக் ஆகியோர் ஆளும் தரப்புடன் இணைந்து வரவுசெலவு திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

அத்தோடு ஜக்கிய மக்கள் சக்தி எம்.பி டயனா கமகே, தமிழ் முற்போக்கு கூட்டணி எம்.பி அரவிந்த குமார் ஆகியோரும் ஆதரவாக வாக்களித்தனர்.

வரவு - செலவுத்திட்டத்துக்கு எதிராக எதிரணியில் ஜக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி எம்.பிக்கள் வாக்களித்தனர். இலத்திரனியல் வாக்களிப்பு முறையில் வாக்கெடுப்பு நடைபெற்றது.

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் ஆகியோர் எதிராக வாக்களித்திருந்தனர். அத்தோடு தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் அவரது கட்சி உறுப்பினரும் எதிராக வாக்களித்தனர்.

இதே வேளை 03 எம்.பிக்கள் வாக்களிப்பின் போது சபையில் பிரசன்னமாகியிருக்கவில்லை. டபிள்யூ.டிஜே.செனவிரத்ன,விஜேதாச ராஜபக்ஷ, குமாரவெல்கம ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்களே இவ்வாறு பிரசன்னமாகியிருக்கவில்லை.

பாராளுமன்றம் ஜனவரி 11ஆம் திகதி மீண்டும் கூடவுள்ளது.