ஒப்படைக்கப்பட்ட பணியை சரிவர நிறைவேற்றிய சிறிசேன குரே

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அனுதாபம்

கொழும்பு மாநகர சபையில் தனது அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்து பின்னர் அமைச்சரவை அமைச்சராக பதவி வகித்த சிரிசேன குரேயின் மறைவுக்கு கவலையை தெரிவித்துக்கொள்கின்றோம். சிரிசேன குரே அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவர்த்தன மற்றும் பிரதமர் ஆர்.பிரேமதாசவின் வேண்டுகோளுக்கிணங்க 1979ம் ஆண்டு கொழும்பு மாநகரசபையில் போட்டியிட்டு மேயராக தெரிவானார். தொடர்ந்து 1989 வரை 10 வருட காலம் அவர் மேயராக பதவி வகித்தார். கொழும்பு மாநகர சபையில் அவர் பதவி வகித்த காலம் சரித்திரத்திலேயே பொன்னான காலமாகும். கொழும்பு நகரை மேம்படுத்துவதோடு கொழும்பில் வாழும் ஏழை மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கும் பல திட்டங்களை அவர் மேற்கொண்டார்.

சிரிசேன குரே மறைந்த ஜனாதிபதி ஆர் பிரேமதாசவின் நெருங்கிய நம்பிக்கைக்குரிய நண்பராகவும் திகழ்ந்தார். ஜனாதிபதி தேர்தலின் போது அவரின் பிரசாரத்துக்கான பெரும் பங்களிப்பை சிறிசேன குரே வழங்கினார். ஜனாதிபதியாக ஆர் பிரேமதாச தெரிவு செய்யப்படுவதற்கு சிறிசேன குரே நண்பராக , திறமையான அமைப்பாளராக மற்றும் ஒரு வழிகாட்டியாக திகழ்ந்தார் என்றே கூற வேண்டும்.

மிகவும் பயங்கரமான வேளையில் வடக்கு கிழக்கில் யுத்த பயங்கரவாதம் என்னும் தீ எரிந்து கொண்டிருந்த வேளையில் நடைபெற்ற 1988 ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை இங்கு குறிப்பிடலாம். அன்றைய சூழலில் தேர்தலை நடத்துவது என்பது நடக்க முடியாத ஒன்றாகவே காணப்பட்டது. அவ்வாறான பின்னணியில் சிறிசேன குரேவுக்கு பெரும் பொறுப்பு அளிக்கப்பட்டிருந்தது. சிறிசேன கூறி அந்த சவாலுக்கு முகம் கொடுத்தார். அதன் பலன் 1988 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் எடுத்துக் தெளிவாக எடுத்துகாட்டின. நாடே பீதியில் உறைந்து இருந்த வேளையில் சவாலுக்கு சவால் விடுத்த அவரது அந்த தீரச்செயல் இன்றும் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

இவர் யார் ?என்ன செய்கின்றார்? என நாடு பூராவும் ஒட்டிய சுவரொட்டிகள் மூலம் ஆரம்பித்த தேர்தல் பிரசார நடவடிக்கைகள் இறுதியில் வெற்றிக்கனியை பெற்றுத்தந்தது. இன்று வரை அனைவரும் வியந்து பேசும் ஒரு விடயமாக காணப்படுகின்றது.

ஜனாதிபதி பிரேமதாசவின் கம் உதாவ வேலைத்திட்டத்திற்கு மேயராக இருக்கும் வேளையிலேயே தனது ஒத்துழைப்பை வழங்கி இருந்தார். 1989ஆம் ஆண்டு பாராளுமன்றத்திற்கு தெரிவான அவர் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சராக பதவியேற்றார். அவருக்கு அந்த அமைச்சுப் பதவி வழங்கப்படுவதற்கு காரணமாக அமைந்தது அவர் கம்உதாவ திட்டத்தின் மூலம் பெற்றிருந்த அனுபவமாகும்.

சம்பிரதாய அரசியல் நடவடிக்கைகளுக்கு அப்பால் ஜனாதிபதி பிரேமதாச வறிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கே கூடிய கவனம் செலுத்தினார். அவரின் அந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக சிறிசேன குரே பெரும் பங்களிப்பை வழங்கினார்.

சிறிசேனகுரே மக்களின் எண்ணங்களை நன்கு புரிந்து கொண்ட அரசியல்வாதியாவார். ஏதேனும் பணி ஒன்றை அவரிடம் ஒப்படைத்தால் அதனை அர்ப்பணிப்புடன் செயல்பட்டு நிறைவேற்றும் திறமை வாய்ந்தவராக அவர் காணப்பட்டார். எல்.ரீ.ரீ.ஈ தாக்குதலால் ரஞ்சன் விஜயரத்ன கொலை செய்யப்பட்ட பின்னர் ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளராக சிரிசேன குரே நியமிக்கப்பட்டார். விசேடமாக ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஏற்பட்ட உட்கட்சி பூசலால் அதிலிருந்து அதிலிருந்து விலகி புரவெசி பெரமுன கட்சியை ஆர். பிரேமதாச ஆரம்பித்த வேளையில் அவருடன் இணைந்து சிரிசேன குரே நம்பிக்கையுடன் செயல்பட்டார். அவர் மீது வைத்த நம்பிக்கை காரணமாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் பதவி சிறிசேன குரேவுக்கு வழங்கப்பட்டது.

ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் அகால மரணத்தைத் தொடர்ந்து அவரது உருவச் சிலையை சென் பஸ்தியமில் அமைத்ததோடு அவர் மரணமடைந்த ஆமர் வீதி சந்தியில் அவருக்கு நினைவுத்தூபியையும் அமைத்தார். அத்துடன் கெத்தாராம விளையாட்டு மைதானத்தை ஆர் பிரேமதாச விளையாட்டு மைதானம் என பெயர் மாற்றம் செய்ததும் சிறிசேன குரே ஆவார்.

1994 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கத்தால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்ட அவர் அரசியல் வாழ்க்கையில் பாராட்டுக்கள் ,அவமானங்கள், லாப ,நட்டம் என அனைத்தையும் நடுநிலையான மனதுடன் ஏற்றுக் கொண்டவர் ஆவார். குரலை உயர்த்தி பேசாத அவரின் முகத்தில் எப்போதும் புன்னகை தவழ்ந்து கொண்டிருக்கும். அவர் யாருடனும் பகைமை பாராட்டாது அனைவரையும் ஒற்றுமையுடன் வாழ வைக்க முயற்சி செய்த ஒரு உயர்ந்த பண்பு நிறைந்த மனிதராவார்.

அவரது மறைவால் துயருற்றிருக்கும் உறவினர்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதோடு அவரது ஆன்மா சாந்தி அடையவும் பிரார்த்திக்கின்றோம்.

-தமிழில்: வீ.ஆர் வயலட்
(கல்குடா தினகரன் நிருபர்)